போட்ரா வெடிய.. விரைவில் வெந்து தணிந்தது காடு 2.. தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை : சிம்பு நடித்து மாஸ் ஹிட்டடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தில் சிம்பு,ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி, அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

வெந்துதணிந்தது காடு : விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தாமரை ஆகிய நால்வர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்தது. ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்த இத்திரைப்படம் செப்டம்பர் 15ந் தேதி திரையரங்கில் வெளியானது.
உடல் எடையை குறைத்தார் : திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி படித்துவிட்டு கருவை முட்களுக்குள், காயங்களுடன் வேலை பார்த்து வரும் முத்து என்ற கதாபாத்திரத்தில் சிம்பு மிகவும் எதார்த்தமாக நடித்திருந்தார். இந்த ரோலுக்காக ஏறக்குறைய 100 கிலோவில் இருந்து 50 கிலோவாக பாதியாக குறைத்து இருபது வயது இளைஞர் போல படத்தில் நடித்திருந்தார்.
அப்பாவி இளைஞன் : அப்பாவி இளைஞனான சிம்பு தனது குடும்பத்திற்காக மும்பைக்கு வேலைக்கு செல்கிறார். வேலைக்கு சேரும் இடத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளினால் சிம்புவின் வாழ்க்கை தடம் மாறி எப்படி கேங்ஸ்டர் ஆக உருமாறுகிறார் என்பதே வெந்து தணிந்தது காடு படத்தின் கதை. சிம்புவின் எதார்த்தமான நடிப்பு முத்து என்ற கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. முதல் பாதி முழுக்கவே தனது பேச்சு மற்றும் உடல் மொழியில் அசத்தி இருந்தார் சிம்பு. இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்து கணிசமான வசூலை அள்ளியது.

சிம்புக்கு பரிசு : வெந்துதணிந்தது காடு படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தின் இயக்குநர் கௌதம் மேனனுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புல்லட் ஒன்றை பரிசாக வழங்கினார். டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார் ஆன 'Toyota vellfire' எனும் காரை சிம்புக்கு பரிசாக வழங்கினார். அந்த காரின் விலை கிட்டத்தட்ட ரூ.1 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
வெந்துதணிந்தது காடு 2 : இந்நிலையில், வெந்துதணிந்தது காடு படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேசன் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை இயக்குனர் கெளதம் மேனன் எழுதி வருகிறார். இந்த பணிகள் நிறைவுபெற்றவுடன் விரைவில் படப்பிடிப்பு துவங்கும். இரண்டாம் பாகத்திலும் நடிக்க நடிகர் சிம்பு ஆர்வமாக உள்ளார் என்று கூறினார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











