அப்பா ரோலில் சூர்யாவை நடிக்க வைக்க விரும்பல.. சமீராவுக்கு பதில் இவங்க.. கெளதம் மேனன் பளிச் பேட்டி!
சென்னை: வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவை அப்பா ரோல் மகன் ரோல் என டபுள் ஆக்ஷனில் நடிக்க வைக்க தான் விரும்பவில்லை என இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். மேலும், சமீரா ரெட்டி நடித்த மேக்னா கதாபாத்திரத்தில் தன்னுடைய முதல் தேர்வு தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் அந்த பிரபல நடிகை தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு சினிமா என்பது ஸ்கேலில் கோடு போட்டது போல ஒரே நேர்கோட்டில் உருவாகும் என்பதை யாராலும் சாத்தியமாக்க முடியாது. இயக்குநரின் கனவில் இருக்கும் விஷுவல்ஸில் ஒரு பாதி படமாக வந்தாலே அது வெற்றிப் படமாக மாறிவிடும். சூட்டிங் ஸ்பாட்டில் சின்ன சண்டை வந்தாலும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்ததை போல கதையே மாறிவிடும்.

வாரணம் ஆயிரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி மற்றும் திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம்தான் வாரணம் ஆயிரம். அந்த படத்தில் நடிகர் சூர்யா அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். முதல் முறையாக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட் கொடுத்திருப்பார். அந்த படத்தில் இடம் பெற்ற "அஞ்சல", " அடியே கொல்லுதே", "அனல் மேலே பனித்துளி", "முன் தினம் பார்த்தேனே" என அத்தனை பாடல்களும் அப்படி ஒரு ஹிட் அடித்திருக்கும்.
டபுள் ஆக்சன் பிளான் பண்ணல: வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா நடித்த அப்பா கதாபாத்திரத்தில் முதலில் மலையாள நடிகரான லால் சார் அல்லது பாலிவுட் நடிகரான நானா படேகர் உள்ளிட்டவர்களை தான் நடிக்க வைக்க நினைத்தேன். எனக்கு டபுள் ஆக்ஷனில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அந்த உண்மைத் தன்மையை அதுக் கெடுத்துவிடும் என நினைத்தேன். ஆனால், சூர்யா தான் என்னை கன்வின்ஸ் செய்தார். அப்பா கதாபாத்திரத்தில் அவரே நடிக்கிறேன் எனக்கூறி நான் நினைத்த அப்பா கதாபாத்திரத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் என கௌதம் மேனன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தீபிகா படுகோன் நடிக்க வேண்டியது: மேக்னா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை தீபிகா படுகோன் தான் என்று கெளதம் மேனன் ஷாக் கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம் படத்தில் அறிமுகமாவதற்கு முன்பாக இந்த பிராஜெக்டில் அவர் இருந்தார். ஆனால், இங்கே சற்று தாமதம் ஆன நிலையில், அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஷாருக்கான் படத்தில் நடிக்க சென்று விட்டார். அதன் பின்னர் சமீரா ரெட்டி மேக்னா கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்து ரசிகர்களை இன்றளவும் கவர்ந்துள்ளார் என்றார்.
அப்போ அசின்: வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் முதலில் நடிகை அசின் மேக்னா கதாபாத்திரத்தில் நடித்த போட்டோக்கள் சமீபத்தில் கசிந்தன. அப்போ இவர் எப்போ என தற்போது அந்த பேட்டிக்கு கீழ் ரசிகர்கள் கெளதம் மேனனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். கஜினி படத்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் அசின் இந்த படத்தில் சில நாட்கள் நடித்து வந்தார். அப்போதே சில கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்தப்பட்டு நடிகர்கள் எல்லாம் மாற்றப்பட்டு உருவான படம் தான் வாரணம் ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











