Gautham Menon - விஜய் ஓகே சொன்னால் ஷூட்டிங் போயிடலாம்.. மனம் திறந்த கௌதம் மேனன்
சென்னை: Gautham Menon (கௌதம் மேனன்) விஜய் ஓகே சொன்னால் யோகன் அத்தியாயம் படத்துக்கான ஷூட்டிங்கிற்கு சென்றுவிடலாம் என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் உருவாகிவருகிறது. இதில் கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் கடந்த மாதம் வெளியானது.

கௌதம் மேனன் பேட்டி: இந்தச் சூழலில் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது லியோ படம் குறித்தும் விஜய் குறித்தும் பேசியிருந்தார். அப்போது லியோ செட்டில் விஜய்யிடம் கதை சொன்னீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " நான் லியோ படப்பிடிப்புத் தளத்திற்கு நடிகனாகத்தான் சென்றேன், அதனால் அங்கு விஜய்யிடம் கதை கூறவில்லை.
கதை அப்படியேத்தான் இருக்கிறது: ஆனால், நான் ஏற்கனவே நடிகர் விஜய்யிடம் யோகன் படத்தின் கதையைக் கூறி அவரும் அதற்கு ஓ.கே சொல்லி இருந்தார். இப்போது வரை அந்தக் கதை அப்படியேத்தான் இருக்கிறது. இப்போது நான் எடுத்துள்ள துருவநட்சத்திரம் படத்தில் இருந்து முற்றிலும் அது வேறுபட்ட கதை. நடிகர் விஜய்யுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன்" என்றார்.
ஸ்டைலிஷ் இயக்குநர்: கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் சூர்யாவை ஆக்ஷன் ஹீரோவாக காக்க காக்கவில் காட்சிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு கமலை வைத்து கௌதம் இயக்கிய வேட்டையாடு விளையாடு மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சமீபத்தில் ரீ ரிலீஸிலும் அந்தப் படம் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.
யோகன் அத்தியாயம் ஒன்று: சூர்யா, கமல் ஹாசன், அஜித் உள்ளிட்டோருடன் பணியாற்றியிருக்கும் கௌதம் மேனன் விஜய்யுடன் இணைவதாக இருந்தது. அந்தப் படத்துக்கு யோகன் அத்தியாயம் ஒன்று என்று பெயரிடப்பட்டு அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சர்வதேச தரத்தில் படம் இருக்கும் என விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
நம்பிக்கை கொடுத்த கௌதம்: இப்படிப்பட்ட சூழலில் லியோ படத்தில் கௌதம் மேனன் நடித்திருப்பதன் மூலம் விஜய்க்கும் அவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கலாம். எனவே தொடர்ந்து முயற்சித்து விஜய்யுடன் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தை ஆரம்பித்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றனர். நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











