துருவ நட்சத்திரம்.. என் இதயமே நொறுங்கிவிட்டது.. அது ஒரு கெட்ட கனவு.. கௌதம் மேனன் உருக்கம்
சென்னை: கௌதம் மேனன் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர். மின்னலே திரைப்படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். ஒருகாலத்தில் அவரது இயக்கத்தில் நடித்துவிட நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகள் காரணமாக இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும் அவ்வப்போது இயக்கத்திலும் கவனம் செலுத்திவரும் அவர் துருவ நட்சத்திரம் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் அடுத்தடுத்து இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தார். போலீஸ் ஸ்டோரி மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய ஜானர்களில் தனது தனித்துவமான மேக்கிங்கால் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார்.

துருவ நட்சத்திரம்: சூழல் இப்படி இருக்க துருவ நட்சத்திரம் என்ற கதையை முதலில் சூர்யா மற்றும் ரஜினியிடம் கௌதம் சொல்ல இருவராலும் நடிக்க முடியவில்லை. அதனையடுத்து இந்தப் படத்தில் விக்ரம் கமிட்டானார். படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரிது வர்மா, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
படத்துக்கு பிரச்னை: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து முடிக்கப்பட்டாலும் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் காரணமாக விக்ரமும், கௌதம் மேனனும் தங்களது அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டனர். கௌதம் மேனன் நடிப்பிலும் தீவிரமாக கவனம் செலுத்துகிறார். தனக்கு ஏற்பட்ட கடனை அடைக்கவே அவர் பல படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் லியோ படத்தில் நடித்திருந்தார். இடையில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு படமும் வரவேற்பையே பெற்றது.
தொடங்கிய வேலைகள்: இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படம் மீண்டும் தூசு தட்டப்பட்டு ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை மும்முரமாக செய்தனர். அதன்படி படமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தை பார்க்க மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி தருவதாக சொல்லி ஏற்கனவே 2 கோடி ரூபாயை கௌதம் மேனன் வாங்கியிருந்தார். படமும் இயக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்கு கௌதம் மேனன் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து பணத்தை கௌதம் மேனன் ரெடி செய்துவிட்டதால் விரைவில் படம் ரிலீஸாகவிருக்கிறது.
கௌதம் மேனன் பேட்டி: இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கௌதம் மேனன் சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "துருவ நட்சத்திரம் திரைப்படம் கடைசி நேரத்தில் வெளியாக முடியாமல் போனது எனது இதயத்தை நொறுக்கிவிட்டது. எனக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. அந்த அமைதியின்மை எனது குடும்பத்தினருக்கும் கவலையை கொடுத்தது. முக்கியமாக என்னுடைய வேலை விஷயத்தில் எப்போதும் தலையிடாத எனது மனைவி எனக்குள் ஏதோ சரியாக இல்லை என்பதை புரிந்துகொண்டார்.
வெறுமை: எல்லா நேரமும் ஒரு வெறுமை உணர்வுதான் இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்காக கூடுதல் பணம் முதலீடு செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த முதலீட்டாளர்களுடன் ரிலீஸுக்கு முதலீடு செய்தவர்களும் இணைந்துகொண்டார்கள். என்னால் அவர்களை எதிர்கொள்ளவே முடியவில்லை. அது ஒரு கெட்ட கனவு போல் இருந்தது. எளிதாக கடந்து வரமுடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











