டேனியல் பாலாஜி திடீர் மரணம்.. கெளதம் மேனன் முதல் வெற்றிமாறன் வரை பதறிட்டாங்க.. நேரில் அஞ்சலி
சென்னை: வில்லன் நடிகராக சினிமாவில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு இளம் வயதிலேயே உயிரிழந்து வருவது பலரையும் கவலையடைய செய்கிறது. ஆவடியில் அங்காள பரமேஸ்வரி கோயில் கட்டி ஆன்மிகத்தின் வழியில் சென்றுக் கொண்டிருந்த டேனியல் பாலாஜி இவ்வளவு சீக்கிரமாக இறைவனடி சேர்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டேனியல் பாலாஜி மறைவு செய்தி அறிந்ததுமே நள்ளிரவே இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் மேனன் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள் இரங்கல்: சமூக வலைதளங்கள் முழுவதும் நள்ளிரவில் இருந்தே #RIPDanielBalaji ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பைரவா மற்றும் பிகில் படங்களில் விஜய்யுடன் டேனியல் பாலாஜி இணைந்து நடித்த காட்சிகளையும் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் டேனியல் பாலாஜி பற்றி பேசிய காட்சிகளையும் ஷேர் செய்து தமிழ் சினிமாவில் ஒரு தரமான வில்லன் நடிகரை இழந்து விட்டோம் என வருந்தி வருகின்றனர்.
கெளதம் மேனன் அஞ்சலி: சித்தி சீரியலில் அறிமுகமான டேனியல் பாலாஜிக்கு காக்க காக்க படத்தில் அன்புச் செல்வன் ஸ்குவாடில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை கொடுத்து தமிழ் சினிமாவுக்கு ஒரு மிரட்டலான நடிகரை அறிமுகப்படுத்தி வைத்ததே கெளதம் மேனன் தான். வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் எனும் கதாபாத்திரத்தை கொடுத்து கமல்ஹாசனையே மிரள செய்து விட்டார். அதன் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், டேனியல் பாலாஜி மறைவு செய்தி அறிந்ததுமே நள்ளிரவே அவரது வீட்டுக்குச் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் கெளதம் மேனன்.

ஓடிவந்த வெற்றிமாறன்: இயக்குநராக பொல்லாதவன் படத்தில் வெற்றிமாறன் அறிமுகமான படத்தில் வில்லனாக ரவி எனும் கதாபாத்திரத்தில் தனது ஒட்டுமொத்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் டேனியல் பாலாஜி. பொல்லாதவன் படத்தை தொடர்ந்து வடசென்னை படத்திலும் டேனியல் பாலாஜிக்கு சூப்பரான கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விஜய்சேதுபதி, சூரி நடித்து வெளியான விடுதலை படத்தில் மேக்கப் மேனாக இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்ததுமே நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்கு பதறியடித்து வந்த வெற்றிமாறன் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியும் செலுத்தினார்.
அமீரின் ரீல் தம்பி: வடசென்னை படத்தில் ராஜனாக நடித்த அமீருக்கு தம்பியாக தம்பி எனும் கதாபாத்திரத்திலேயே டேனியல் பாலாஜி நடித்திருப்பார். இயக்குநர் அமீரும் நேரில் சென்று டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். தனுஷ், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











