முன்னணி ஹீரோவை இயக்கும் கௌதம் மேனன்?.. அண்ணனுக்கு அடுத்து தம்பியா?.. காம்போ சூப்பர்தான்
சென்னை: கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். மின்னலே தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயாவரை தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தனக்கு ஏற்பட்ட கடனை சரி செய்வதற்காக நடிப்பில் கவனம் செலுத்தினார் அவர். சூழல் இப்படி இருக்க கடைசியாக அவர் மம்மூட்டியை வைத்து டாமினிக் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தை மலையாளத்தில் இயக்கினார். படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். மாதவன், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இன்றுவரை அவரது படங்கள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டுவருவதை வைத்தே உணர்ந்துகொள்ளலாம் அவர் எந்த அளவுக்கு ஃபார்மில் இருந்தார் என்று.

ஸ்டைலிஷ் இயக்குநர்: அதேபோல் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர்களில் கௌதம் மேனன் முக்கியமானவர். அவரது இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் அவ்வளவு அழகாக காட்சியளிப்பார்கள். காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அத்தனையையுமே ஒட்டுமொத்தமாக மாற்றி வேறு ஒரு ஆளாக கேமரா முன் நிறுத்துவார் கௌதம் மேனன். இன்றுவரை சிம்பு, சூர்யா உள்ளிட்டோரின் ஆல்டைம் ஃபேவரைட் லுக் எது என்று ரசிகர்களிடம் கேட்டால் அதில் கௌதம் மேனன் இயக்கிய படத்தின் லுக்கும் இருக்கும்.
பிரச்னைகள்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன. அதன் காரணமாக இயக்கத்தில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். பிறகு பிரச்னைகளை சரி செய்வதற்காக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடிப்பிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் அவர் ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட்டானது. இதற்கிடையே துருவ நட்சத்திரம் படத்தை அவர் இயக்கியிருந்தாலும் அந்தப் படம் ரிலீஸாகாமல் இருந்தது.

டாமினிக் தி லேடீஸ் பர்ஸ்: சூழல் இப்படி இருக்க அவர் கடைசியாக மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து டாமினிக் தி லேடீஸ் பர்ஸ் படத்தை இயக்கினார். கண்டிப்பாக இயக்கத்தில் அவர் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. அதேசமயம் கௌதமின் மேக்கிங்கும், டச்சும் இன்னமும் அவரை விட்டு போகவில்லை என்று ரசிகர்கள் மகிழ்ச்சியாகவே தங்களது கருத்தினை கூறினார்கள்.
கார்த்தியுடன் கூட்டணி?: இந்நிலையில் கௌதம் மேனன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி நடிகர் கார்த்தியுடன் அவர் இணையவிருக்கிறாராம். சமீபத்தில் கார்த்தியை சந்தித்து கௌதம் கதை கூறியதாகவும்; அது தனக்கு பிடித்து போனதால் படத்தில் நடிக்க கார்த்தி ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. கார்த்தி கடைசியாக மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வா வாத்தியார் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணனுடன் ஹிட் கூட்டணி: முன்னதாக கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யாவுடன் கௌதம் மேனன் இணைந்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் பணியாற்றியிருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே இன்றுவரை கொண்டாடப்படுகின்றன. ஆனால் துருவ நட்சத்திரம் படத்தின் கதையில் சூர்யா நடிக்க ஓகே சொல்லவில்லை. அதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய கௌதம், 'சூர்யா என் மீது நம்பிக்கை வைத்து துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்க வேண்டும். அப்படி அவர் நடிக்காதது எனக்கு வருத்தம்தான்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











