Vadivelu - அய்யோ வேற லெவல் கூட்டணியா இருக்கே.. வடிவேலுவை இயக்கப்போகும் ஸ்டைலிஷ் இயக்குநர்?
சென்னை: வடிவேலு சில பிரச்னைகள் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு அவரை சுற்றி இருந்த அனைத்து பஞ்சாயத்துக்களும் தீர்த்து வைக்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருகிறார். இந்த சூழலில் அவரை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு..90களில் அறிமுகமான அவர் 90ஸ் கிட்ஸுக்கும் செட் ஆவார் தற்போதைய தலைமுறையான 2K கிட்ஸுக்கும் செட் ஆவார். சோஷியல் மீடியா சூழ்ந்த இந்த உலகில் பல மீம்ஸ்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருப்பது வடிவேலுதான். சில பிரச்னைகள் காரணமாக 10 வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அனைத்து வீடுகளின் தொலைக்காட்சிகள் வழியாக வைகைப்புயல் வீசிக்கொண்டுதான் இருந்தது.

அரசியல் மேடை: 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மேடை ஏறிய வடிவேலு விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அதிமுக - தேமுதிக கூட்டணி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனவே இனியும் வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என திரைத்துறையினர் அஞ்சி வடிவேலுவை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதுமட்டுமன்றி வடிவேலுவின் சில தனிப்பட்ட நடவடிக்கைகளுமே அவர் திரைத்துறையிலிருந்து காணாமல் போனதற்கு காரணம் என்றும் கூறப்படுவதுண்டு.
ரீ எண்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில் வடிவேலுவை சுற்றி இருந்த பஞ்சாயத்து தீர்ந்து போனதை அடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. குறிப்பாக வடிவேலுவின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள். அதேசமயம் அடுத்ததாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. பல வருடங்கள் கழித்து வடிவேலுவுக்குள் இருந்த குணசித்திர நடிகரை மாரி செல்வராஜ் வெளியே கொண்டு வந்திருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்: மாமன்னன் பெற்ற மாபெரும் வெற்றியை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. அந்தவகையில் அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே ஃபகத்தும், வடிவேலுவும் மாமன்னனில் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். எனவே இந்தப் படத்தில் இருவரையும் மீண்டும் பார்க்கும் நிலை உருவாகியிருப்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
கெளதம் மேனனுடன்: இந்நிலையில் வடிவேலுவின் புதிய பட இயக்குநர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரை வைத்து கௌதம் மேனன் படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வடிவேலுவிடம் அவர் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்தக் கூட்டணி சாத்தியப்பட்டால் வடிவேலுவின் திரை வாழ்க்கையில் அந்தப் படம் மாறுபட்டதாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ஏனெனில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஸ்டைலிஷ் இயக்குநர்களில் ஒருவர்தான் கௌதம் மேனன். அவர் படத்தில் நடித்தால் ஹீரோக்கள் அவ்வளவு அழகாக இருப்பார்கள். மேற்கூறிய தகவல்படி வடிவேலுவை கௌதம் மேனன் இயக்கினால் அதில் எப்படிப்பட்ட வடிவேலுவாக ஜொலிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதே எழ ஆரம்பித்திருப்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications











