மச்சான் கெளதம் மேனனுக்கு ’நோ’ சொல்ல மாட்டேன்.. டேனியல் பாலாஜியின் கடைசி படம் எது தெரியுமா?
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தில் தனது மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நண்பன் அன்புச் செல்வனை (சூர்யா) காட்டிக் கொடுக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் டேனியல் பாலாஜி. இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை காரணமாக பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த டேனியல் பாலாஜியும் கௌதம் மேனனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.
காக்க காக்க படத்தை தொடர்ந்து வேட்டையாடு விளையாடு படத்தில் டேனியல் பாலாஜிக்கு அமுதன் கதாபாத்திரத்தை கொடுத்து மிகப்பெரிய வில்லனாக மாற்றிவிட்டார் கௌதம் மேனன்.

மச்சான் கௌதம் மேனன் எப்போது எந்த படத்தில் நடிக்க அழைத்தாலும் நோ சொல்ல மாட்டேன் என த்ரோபேக் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மேலும், டேனியல் பாலாஜியின் கடைசி படமாகவும் கௌதம் மேனன் இயக்கிய படமே மாறிவிட்டது.
மச்சானுக்கு 'நோ' சொல்ல முடியாது: நம் வாழ்வில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் சிலருக்கு எப்போதுமே 'நோ' சொல்ல முடியாது. வெற்றிமாறனுக்கு கூட ஒருமுறை அவரது படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறேன். கேஜிஎஃப் ஹீரோ அழைத்தும் செல்லவில்லை. ஆனால், ஒருபோதும் மச்சான் கௌதம் மேனனுக்கு 'நோ' சொன்னதே கிடையாது என டேனியல் பாலாஜி பேசுவதை கேட்கும் போதே ரசிகர்களுக்கு உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடிவிடும். அப்படி நட்புக்கு இலக்கணமாக இருந்த டேனியல் பாலாஜியின் மறைவு கெளதம் மேனனை எந்தளவுக்கு பாதித்து இருக்கும். அதனால், தான் நள்ளிரவே டேனியல் பாலாஜியின் உயிரற்ற உடலை பார்க்க புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கனத்த இதயத்துடன் கெளதம் மேனன் கிளம்பி வந்து நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடைசி படம்: வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் ஒரே ஒரு சின்ன சீனுக்கு வந்து நடித்திருப்பார். அதேபோல சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சியான் விக்ரமை வைத்து கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் அனைவரையும் இணைக்கும் ஒரு மைய கதாபாத்திரத்துக்கு நீ நடித்தால் தான் நல்லா இருக்கும் என கெளதம் கூப்பிட்டார். அந்த படத்தில் ஒரு ரெண்டு சீன் நடிச்சிருக்கேன் எனக் கூறியுள்ளார். அந்த படமே டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமாக மாறிவிட்டது. விரைவில் அந்த படம் வெளியானால் டேனியல் பாலாஜிக்கு ஒரு ட்ரிப்யூட்டாக அமையும்.


Click it and Unblock the Notifications











