துருவ நட்சத்திரம் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் கௌதம் மேனன்
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு விக்ரமை வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். சூர்யாவிடம் முதலில் சென்ற இந்த கதை அதன் பிறகு விக்ரமிடம் வந்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் பண பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பண பிரச்னையால் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் அடுத்தடுத்து இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தார். போலீஸ் ஸ்டோரி மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய ஜானர்களில் தனது தனித்துவமான மேக்கிங்கால் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார்.

கௌதமின் துருவ நட்சத்திரம்: சூழல் இப்படி இருக்க துருவ நட்சத்திரம் என்ற கதையை முதலில் சூர்யா மற்றும் ரஜினியிடம் கௌதம் சொல்ல இருவராலும் நடிக்க முடியவில்லை. அதனையடுத்து இந்தப் படத்தில் விக்ரம் கமிட்டானார். படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரிது வர்மா, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
படத்துக்கு வந்த பிரச்னை: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து முடிக்கப்பட்டாலும் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் காரணமாக விக்ரமும், கௌதம் மேனனும் தங்களது அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டனர். கௌதம் மேனன் நடிப்பிலும் தீவிரமாக கவனம் செலுத்துகிறார். தனக்கு ஏற்பட்ட கடனை அடைக்கவே அவர் பல படங்களில் நடித்துவருகிறார்.
ரிலீஸுக்கு மீண்டும் மீண்டும் சிக்கல்: இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படம் மீண்டும் தூசு தட்டப்பட்டு ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை மும்முரமாக செய்தனர். அதன்படி படத்தின் ரிலீஸ் வேலைகள் தொடங்கின. அதனால் படத்தை பார்க்க மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி தருவதாக சொல்லி ஏற்கனவே 2 கோடி ரூபாயை கௌதம் மேனன் வாங்கியிருந்தார். படமும் இயக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் சென்றதைத் தொடர்ந்து இரண்டு கோடி ரூபாயை கௌதம் மேனன் தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி ரிலீஸுக்கு தடை விதித்தது கோர்ட்.
எப்போது ரிலீஸ்: ஒருவழியாக அந்தப் பிரச்னையையும் கௌதம் மேனன் இப்போது முடித்துவிட்டார் என்று தெரிகிறது. இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மே மாதம் ஒன்றாம் தேதி படம் ரிலீஸாக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரலாம் என்றும் தெரிகிறது. அன்றைய நாள்தான் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











