மீண்டும் நடிகராகும் கௌதம் மேனன்.. அப்போ என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்?
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் மீண்டும் நடிகராகிறார் கௌதம் மேனன்!
சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்.
துல்கர் சல்மான் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். ரிது வர்மா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கேபிஒய் புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார்.
ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

ஒரு வருட முயற்சி:
இது பற்றி இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறுகையில், "கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர்தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன்.

நடிக்க சம்மதம்:
ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது, இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டைலிஷ் இயக்குநர்:
தமிழின் ஸ்டைலிஷான இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் தற்போது விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் படமும், தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

மீண்டும் நடிப்பு:
இதுவரை தான் இயக்கிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்த கௌதம் மேனன், கோலிசோடா 2 படத்தில் கௌரவத் தோற்றத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்கத்திற்கு நடுவே அவர் நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











