Exclusive.. Gemini - ரொம்ப பிகு பண்ணிதான் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டார்.. ஜெமினி ரகசியம் பகிரும் சரண்
சென்னை: 21 years of Gemini (ஜெமினி திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் நிறைவு) ஜெமினி திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் நிறைவு ஆனதையொட்டி அதன் இயக்குநர் சரண் தமிழ் பில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
Recommended Video

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சரண். அஜித்தை வைத்து காதல் மன்னன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர். கமர்ஷியல் படங்களுக்கு நேர் எதிராக படம் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தாலும் கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் சரண் எப்போதும் கிங். காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜே ஜே, அட்டகாசம் என அவர் எடுத்த படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தவை.

ஜெமினி: அவர் இயக்கிய படங்களில் ஜெமினி படம் முக்கியமானது. பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருக்கும் அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். சினிமா என்றால் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் என்று இருந்த விதியை உடைத்து இரண்டு பேருமே கெட்டவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற லைனை பிடித்து படமாக்கினா சரண். பாரம்பரிய சினிமா கம்பெனியான ஏவிஎம் தயாரித்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதுமட்டுமின்றி கதையம்சம் உள்ள படங்களில் கலக்கிய விக்ரம் ஜெமினியில் கமர்ஷியல் ஹீரோவாக இறங்கி அடித்திருப்பார்.
கலாபவன் மணி: விக்ரம் ஆகச்சிறந்த நடிகர் என்பதை பல முறை நிரூபித்துவிட்டார். அவர் ஸ்க்ரீனில் இருக்கும்போது அவரைத் தவிர்த்து மற்றொருவரிடம் கண்கள் போவது ரொம்பவே அரிது. ஆனால் ஜெமினியில் விக்ரமைவிட ஒரு படி மேலே சென்று ஸ்கோர் செய்திருப்பார் கலாபவன் மணி. அதுவரை அப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா கண்டதில்லை.

அப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படி பல சிறப்புகளை கொண்ட ஜெமினி திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி அப்பட இயக்குநர் சரண் தமிழ் பில்மிபீட்டுக்கு பேட்டி அளித்தார்.
ஏவிஎம்மின் ரீ என்ட்ரி: சரண் அளித்த பேட்டியில், "சினிமாவின் பாரம்பரிய கம்பெனி ஏவிஎம் நிறுவனம். அவர்கள் இடையில் ஐந்து வருடங்கள் பிரேக் எடுத்திருந்தார்கள். அவர்கள் மீண்டும் படம் பண்ண வேண்டும் என நினைத்து என்னை அழைத்தார்கள். அவர்களிடம் மொத்தம் மூன்று லைன்கள் சொன்னேன். அவர்கள் இந்த லைனை தேர்ந்தெடுத்தார்கள். அதனையடுத்து அதை நான் டெவலப் செய்தேன். அந்தப் படத்தின்போது எனக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள் இருந்தன.
அதில் முக்கியமானது ஏவிஎம். ஏனெனில் அந்த கம்பெனி தொடர்ந்து படம் பண்ணியிருக்கும்போது நான் இயக்குநராக கமிட்டாகியிருந்தால் பெரிதாக இருந்திருக்காது. ஆனால் ஐந்து வருடஙக்ள் கழித்து படம் தயாரிக்க வரும்போது எதுவும் சொதப்பிடக்கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தேன். அதுமட்டுமின்றி ஏவிஎம்மின் மரபை படமாக ஜெமினி இருந்தது. அதனால் எனக்கு அழுத்தமாகவே இருந்தது.
மேடையில் கலாபவன் மணி: ஜெமினி கதையை டெவலப் பண்ணியபோது ஒரு வில்லன் என்றுதான் வைத்திருந்தேன். தேஜா என்ற கதாபாத்திரத்தை எழுதவில்லை அந்த சமயத்தில் மிருகங்கள் போல் மிமிக்ரி செய்வார் கலாபவன் மணி என கேள்விப்பட்டேன். அதுமட்டுமின்றி அவர் மேடைகளிலும், பெர்ஃபார்ம் செய்திருந்தார். அவர் அப்போது மலையாளத்தில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு காமெடி ஆர்ட்டிஸ்ட். சென்னைக்கு வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக கலாபவன் மணி வந்திருந்தார்.
அசந்துபோன சரண்: அவரை நேரில் சந்தித்து சேட்டா உங்களுக்கு என்ன தெரியுமோ பண்ணுங்க. நீங்க ஸ்டேஜில் செய்யும்போது அந்த ஷோவுக்கு நான் வரவில்லை. எனவே இங்கு நீங்கள் செய்து காமியுங்கள் என சொன்னேன். அவரும் பல மிமிக்ரியை 40 நிமிடங்கள் ஒரே சீனாக செய்தார். நான் அசந்துவிட்டேன். செய்து முடித்துவிட்டு இதை எப்படி ஒரே சீனில் வைப்பீர்கள். இதுவே மூனு ரீல் வந்துடுமே என்றார்.
பிகு பண்ணிய கலாபவன் மணி: உடனே நான், ஒரு சீனில் வைக்கப்போகிறேன் என யார் சொன்னது. படம் முழுக்க வரும்படி பார்த்துக்கொள்கிறேன் என்றேன். அதற்கு பிறகுதான் அவருக்கு நம்பிக்கை வந்தது. மேலும், மலையாளத்தில் நன்றாக எனக்கு போய்க்கொண்டிருக்கிறது என்றார். இப்படி ரொம்பவே பிகு பண்ணிதான் ஜெமினி படத்தில் கலாபவன் நடிக்க ஒத்துக்கொண்டார்.
விக்ரம்தான் காரணம்: ஜெமினி திரைப்படத்தில் கலாபவன் மணி கேரக்டர் கொண்டாடப்படுகிறது. அதற்கு விக்ரம்தான் காரணம். ஏனெனில் அப்படத்தில் விக்ரம் கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டும். அவர் அதனை சரியாக செய்ததால்தான் கலாபவன் மணியின் கேரக்டர் ரசிகர்களுக்கு பளீச்சென்று தெரிந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications