வாரிசுகிட்ட வாங்கிய அடி போதாதுன்னு.. கில்லி ரீ ரிலீஸ்லையும் அடி வாங்கும் துணிவு.. முதல் நாள் வசூல்?
சென்னை: கடந்த வாரம் வெளியான மை லார்ட் மற்றும் பூக்கி படங்களாவது ஓரளவுக்கு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க போராடின. ஆனால், இந்த வாரம் வெளியான புதிய படங்கள் மீது ரசிகர்கள் பெரிதும் அக்கறையே காட்டவில்லை. ஆனால், அதற்கு மாறாக சூது கவ்வும் ரீ ரிலீஸ், கில்லி ரீ ரிலீஸ் மற்றும் துணிவு ரீ ரிலீஸ் படங்களை ரசிகர்கள் ஒரு சில தியேட்டர்களில் கொண்டாடினர்.
ஓடிடியின் வளர்ச்சிக்குப் பிறகு உலகம் முழுவதும் மக்கள் தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதை அதிகளவில் குறைத்துக் கொண்டனர். வீட்டிலேயே கோடிக் கணக்கில் படம் இருந்தாலும் எந்த படத்தை பார்ப்பது என்று தேடவே பல மணி நேரம் ஆவதாக ஆய்வறிக்கைகள் எல்லாம் வருகின்றன.

வாரத்துக்கு 8 முதல் 10 புதிய படங்கள் வந்தாலும், அதை தியேட்டருக்குச் சென்று தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை இல்லாத காரணத்தால் 2 வாரத்தில் அல்லது 4 வாரத்தில் வீட்டிலேயே குடும்பத்துடன் ஒரே ஒரு சப்ஸ்க்ரிப்ஷன் உடன் ஹாயாக படுத்துக் கொண்டே பார்க்கிங் செலவு, பாப்கார்ன் செலவு, பால் அபிஷேக செலவு இல்லாமல் கொண்டாட தொடங்கி விட்டனர்.
தவிக்கும் தியேட்டர் ஓனர்கள்: முன்னணி நடிகர்கள் எல்லாம் படங்களில் நடிக்கத் தயக்கம் காட்டி அதிக சம்பளம் கிடைக்காத நிலையில், வீட்டில் ஒரு வருடம் சும்மா வேண்டுமானால் இருப்பேன், நடிக்க போக மாட்டேன் என அடம்பிடிப்பதால் தான் தியேட்டர் பக்கம் ரசிகர்கள் வரமாட்டேங்கிறாங்க என திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் ஓபனாகவே ஹீரோக்களை குறை கூற ஆரம்பித்துள்ளனர். புதிய படங்களையும் புதுமுக நடிகர்களையும் தியேட்டருக்குச் சென்று பார்த்து வரவேற்க மக்கள் அதிகளவில் தயாராக இல்லை. படம் உண்மையாகவே நல்லா இருக்கு அதை தியேட்டரில் போய் உடனடியாக பார்த்தே ஆகவேண்டும் என்கிற ஹைப் உருவானால் மட்டுமே தியேட்டருக்கு மக்கள் படையெடுக்கின்றனர்.
ரீ ரிலீஸ் அஸ்திரம்: இந்நிலையில், தியேட்டர் தொழிலை நம்பி இருக்கும் பலரும் ரீ ரிலீஸ் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர். ஹாலிவுட் படங்கள் கூட பெரிதளவில் ரசிகர்களை சமீப காலமாக கவராத நிலையில், அஜித், விஜய், ரஜினி படங்களின் ரீ ரிலீஸ் மட்டுமே ஒரே தீர்வு என தொடர்ந்து வார வாரம் சில ரீ ரிலீஸ் படங்களையே ரிலீஸ் செய்து 3 நாட்கள் வசூல் வந்தால் கூட ஒரு வாரத்தை ஓட்டிவிடலாம் என நினைத்து விட்டனர்.
கில்லி vs துணிவு ரீ ரிலீஸ் வசூல்: எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு படத்துடன் போட்டியாக வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் வாரிசு படம் துணிவு படத்தை பீட் செய்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இந்நிலையில், துணிவு ரீ ரிலீஸ் மற்றும் கில்லி ரீ ரிலீஸ் நேற்று நடைபெற்ற நிலையில், துணிவு படத்தை விட கில்லி ரீ ரிலீஸ் படத்துக்கே அதிக கூட்டம் வந்தது எனக் கூறுகின்றனர். வசூலிலும் கில்லி தான் டாப்பில் உள்ளது என்கின்றனர்.
முன் பதிவில் துணிவு 1.5 லட்சமும் கில்லி 3 லட்சமும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று முதல் நாளில் கில்லி ரீ ரிலீஸ் அதிகபட்சமாக 7 லட்சம் வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துணிவு ரீ ரிலீஸ் 4 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். சனி மற்றும் ஞாயிறு எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். ஆனால், 2 படங்களின் வசூலும் பெரிதாக இல்லை என்பது தான் தியேட்டர் ஓனர்களின் தலைவலி.


Click it and Unblock the Notifications











