அப்படிப்பட்ட பெண்களால்தான் பிரச்சினை - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மோகன் ஜி
சென்னை: தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் இயக்குநர் மோகன் ஜி தற்போது பெண்கள் குறித்து பேசி மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருந்துவருகிறது. உண்மை கதையையும், சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் படமாக எடுக்கிறேன் என்ற பேரில் குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி படம் எடுப்பதாக அவர் மீது எப்போதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

அவரது படங்கள் சந்தித்த சர்ச்சைகள்
பழைய வண்ணாரப்பேட்டை படத்துக்கு பிறகு அவர் திரௌபதி படம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் நடித்திருந்த அந்தப் படம் நாடகக் காதலை மையப்படுத்தியிருப்பதாக கூறி எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக படம் வெளியானபோது விவாதம் எழுந்தது. அதனையடுத்து ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்கினார் மோகன் ஜி. அந்தப் படத்திலும் பட்டியலினத்தவர்களை தவறாக மோகன் ஜி சித்தரித்துவிட்டார் எனவும், விசிக தலைவர் திருமாவளவனை நேரடியாக தாக்கியிருக்கிறார் எனவும் பேச்சு எழுந்தது.

பத்திரிகை அலுவலகத்தில் மிரட்டிய மோகன் ஜி
அவரது படங்கள் மட்டுமின்றி அவரது செயல்பாடுகளுமே விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஒரு பத்திரிகை பேட்டியை பாதியில் முடித்துவிட்டு கிளம்பிய அவர் அடுத்த நாள் அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு சிலருடன் சென்று மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. ஒரு இயக்குநராக இருந்துகொண்டு அடியாள் போல் செயல்படுகிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

ட்ரோல்களை சந்திக்கும் மோகன் ஜி
சர்ச்சைகள், விமர்சனங்கள் மட்டுமின்றி ட்ரோல்களையும் ஓயாமல் சந்திப்பவர் மோகன் ஜி. சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அவர் கொடுத்த பேட்டியின்போது, புத்தகம் வாசிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன், "எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முடி திருத்தும் கடைக்கு வரும் தினத்தந்தியில் கன்னித்தீவு தொடர்ந்து படிப்பேன்" என பதிலளித்தார். அவரது இந்த பதில் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது.

மோகன் ஜி சிக்கியிருக்கும் சர்ச்சை
இப்படி சர்ச்சைகள், விமர்சனங்கள், ட்ரோல்களில் தொடர்ந்து சிக்கிக்கொள்ளும் மோகன் ஜி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பெண்கள் தங்கள் சமூக வலைதளத்தில் முகப்பு படங்களை அழகாக வைக்க வேண்டாம். அப்படி வைப்பதுதான் சில பிரச்னைகள் உருவாக முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது" என்றார்.
மோகன் ஜியின் இந்தப் பேச்சை கேட்ட பலர், பெண்கள் வைக்கும் முகப்பு படங்களால்தான் பிரச்னைகள் வருகின்றன என மோகன் ஜி கூறுவது அவரது பிற்போக்குத்தனத்தை காட்டுவதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிப்ரவரி 17ல் பகாசூரன்
மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் செல்வராகவன், நட்டி, மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சாம்.சிஎஸ் இசையமைத்திருக்கிறார். படமானது பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











