அதுக்காகவே என்னை உள்ளே விடவில்லை... இன்று எல்லாம் மாறியது... சிவன் கோயிலில் ஷகிலா உருக்கம்!
சென்னை: மலையாளத்தில் ஏராளமான கவர்ச்சிப் படங்களில் நடித்து பிரபலமானவர் ஷகிலா.
1990களில் ஷகிலாவின் கவர்ச்சிப் படங்களுக்காகவே மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியிருந்தது.
கடந்த சில வருடங்களாக கவர்ச்சிப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக தன்னை அனுமதிக்காதது குறித்து மிக உருக்கமாக பேசியுள்ளார் ஷகிலா.

சேட்டன்மார்களின் கனவுக் கன்னி
மலையாளத்தில் ஏராளமான கவர்ச்சி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. 1994 முதல் 2003 வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவர்ச்சி படங்களில் நடித்த ஷகிலாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விடவும் ஷகிலாவின் திரைப்படங்கள் வசூலை வாரிகுவித்த வரலாறு உள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களிலும் ஷகிலாவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

ஷகிலாம்மாவாக மாறிய தருணம்
2003ல் வெளியான ஜெயம் படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார் ஷகிலா. அதன்பின்னர் தூள், வாத்தியார், வியாபாரி, அழகிய தமிழ் மகன் உட்பட பல தமிழ்ப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வரும் ஷகிலா, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். அன்று முதல் அவர் ஷகிலாம்மா என மரியாதைக்குரிய வார்த்தையால் ரசிகர்களால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிவன் கோயிலில் உருக்கம்
இந்நிலையில், தான் கவர்ச்சி நடிகை என்ற ஒரே காரணத்துக்காக பொதுஇடத்தில் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஷகிலா மனம் திறந்து பேசியுள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அதில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஷகிலாவை, வணிக வளாக நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியையும் அவர்கள் ரத்து செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு காரணத்துக்காகவே அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததாக வணிக வளாக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.

எல்லாம் சிவனின் கணக்கு
இந்நிலையில், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள தைகட்டு ஸ்ரீ மகாதேவா கோயில் நிகழ்ச்சியில் ஷகிலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நான் இங்கே சிறப்பு விருந்தினராக வந்திருப்பது கடவுளால் திட்டமிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நான் கடந்த முறை கேரளா வந்த போது வணிக வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திரும்பிச் சென்றேன். ஆனால், கடவுள் எனக்காக வேறு திட்டங்கள் வைத்திருந்ததை நான் இப்போது உணர்ந்து கொண்டேன். வணிக வளாகத்தில் என்னைப் பார்க்க 200, 300 பேர் வந்திருந்தனர். ஆனால் இங்கே என்னை 1000 கண்கள் பார்த்துக்கொண்டிருப்பதை காண்கிறேன் என மிக உருக்கமாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











