தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் போஸ் கொடுத்த ’அவன் இவன்’ ஜி.எம் குமார்.. என்னவொரு குசும்புத்தனம்!
சென்னை: கன்னி ராசி, காக்கிச் சட்டை மற்றும் மைடியர் மார்த்தாண்டம் உள்ளிட்ட படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றிய பிரபல தமிழ் சினிமா ஆளுமையான ஜி.எம். குமார் அவன் இவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து நடிகராகவும் அசத்தி உள்ளார்.
பிறப்பிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட ஜி.எம். குமார் தற்போது தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அடித்து அதன் அருகே நின்று கொண்டிருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
உங்களுக்கு இன்னும் பழைய குசும்பு போகல என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சில படங்களை இயக்கி உள்ளார்
பாண்டிராஜின் கன்னி ராசி, கமல்ஹாசனின் காக்கிச் சட்டை, பிரபுவின் மைடியர் மார்த்தாண்டம் உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய ஜி.எம். குமார் 1986ம் ஆண்டு பிரபு மற்றும் பல்லவி நடிப்பில் வெளியான அறுவடை நாள் படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். பிக் பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.

அவன் இவன்
1993ம் ஆண்டு வெளியான கேப்டன் மகள் படத்தில் இருந்து சிறு சிறு வேடங்களிலும் இவர் நடித்து வருகிறார். தொட்டி ஜெயா, வெயில், மச்சக்காரன், குருவி, அவன் இவன், தார தப்பட்ட, வேலையில்லா பட்டதாரி 2, பட்டத்து அரசன், பொம்மை நாயகி மற்றும் சமீபத்தில் வெளியான அடல்ட் காமெடி படமான பல்லு படாம பாத்துக்கோ படம் வரைக்கும் இவர் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த அவன் இவன் படத்தில் இவர் நடித்த ஜமிந்தார் கதாபாத்திரத்தை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உடன்
நக்கல் நய்யாண்டி என அதிகம் நகைச்சுவை திறன் கொண்டவரான ஜி.எம். குமார் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அருகே நின்று கொண்டு எடுத்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். பல்வேறு நடிகர்கள் இறந்து விட்டதாக போலி செய்திகளை பரப்புவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படியொரு வேலையை பார்த்துள்ளாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த தேதியில் மரணம்
30.10.1953ல் தோற்றம் என்று போட்டுள்ள ஜி.எம். குமார் கரியமாணிக்கம் எனும் பெயருடன் மே 1ம் தேதி 2023ல் மரணம் எனப் போட்டுள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஜி.எம். குமார் பெயர் இல்லாத நிலையில், அவர் புதிதாக நடிக்கும் படத்தில் இடம்பெற்ற போஸ்டராக இருக்கும் என்பதை ரசிகர்கள் கண்டு பிடித்து உங்களுக்கு செம ஹியூமர் சென்ஸ் சார் என பாராட்டி வருகின்றனர்.

ஓடிடியில் பிஸி
தமன்னாவுக்கு அப்பாவாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸில் அட்டகாசமான நடிப்பை ஜி.எம் குமார் வெளிப்படுத்தி இருப்பார். கடைசி வரை அந்த கொலையை அவர் செய்தாரா? இல்லையா? என்றே கதை நகரும். மேலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸில் கவுரி கிஷன் தாத்தாவாக நடித்திருப்பார்.


Click it and Unblock the Notifications











