GOAT box office: வரலாறு காணாத கோட் வசூல்.. அடித்து தூக்கிய விஜய்.. 5 நாள் கலெக்ஷன் இவ்வளவா?
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோட் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.288 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ஐந்தாம் நாள் வசூல் குறித்த தகவலை பார்க்கலாம்.
சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. வெங்கட்பிரபு மற்றும் விஜய் இப்படத்தின் மூலம் முதல்முறையாக இணைந்திருக்கிறார்கள். விஜய் தற்போது அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

தளபதியின் கோட்: இப்படத்தில் விஜயுடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகிபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. விஜய் அப்பா மகன் என இரண்டுவிதமான ரோலில் நடித்துள்ள இப்படத்தில், நடிகை த்ரிஷா மட்ட பாடலுக்காக நடனமாடி உள்ளார். இந்த பாடலுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.
5ம் நாள் வசூல்: தளபதி ரசிகர்களின் வரவேற்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாள் ரூ.126.32 கோடியை வசூலித்தது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மூன்றாவது நாளிலேயே கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை வசூலித்த நிலையில், படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, ஐந்தாம் நாளான நேற்று வேலை நாட்களாக இருந்த போதும் ரூ14 கோடி வசூலித்து, கோட் திரைப்படம் ரூ 300 கோடியை தாண்டி உள்ளது. இதனை விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஓடிடியில்: கோட் திரைப்படம் ஏற்கனவே 3 மணி நேரமாக இருக்கும் நிலையில், படத்தின் நீளம் கருதி, நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் ஓடிடியில் இணைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால், ஓடிடியில் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய படமாக 'தி கோட்' திரைப்படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதில் படத்தில் விஜய் சென்றவுடன் சிவகார்த்திகேயன் - மோகன் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் காட்சியும் அடங்கும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். வெளியாகி உள்ள இந்த தகவலால் ஓடிடி கோட் படத்தை பார்க்க தளபதியின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications