twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படப்பிடிப்புக்குக் கிளம்புவது அவ்வளவு எளிதா என்ன ?

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    இன்றைக்கும் ஒரு திரைப்படத்தின் ஆக்கத்தில் ஐவரே தலையாயவர்கள். இயக்குநர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர். ஒரு திரைப்படத்தை இயக்குநர் கூறியவாறு ஒளிப்பதிவாளர் எடுத்துக் கொடுக்கிறார். இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அப்படத்திற்கு இரண்டு கண்கள். இயக்குநர் கூறியவாறு படத்தொகுப்பாளர் தொகுத்துக் கொடுக்கிறார். அவற்றுக்கு இசையமைப்பாளர் ஒலியால் உயிர்கொடுக்கிறார். அவர்கள் ஐவர்க்கும் மேலே இருப்பவர்தான் தயாரிப்பாளர். ஆக்கத்தில் அவருடைய ஒப்புதலும் இசைவும் பங்காற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அப்படத்தின் பொருள்நலத்தையன்றி வேறெதன்மீதும் அவர் உரிமை கோருபவரல்லர்.

    ஒரு தெளிவான திரைக்கதையை உருவாக்குவதுதான் முதன்மைப்பணி. வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ள சமூக உணர்ச்சிக் களத்தினை எடுத்துக்கொண்டு அதற்குத் திரைக்கதை வடிவம் கொடுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல் என்பது ஒரு கதைப்பொருளாகக் கருதத்தக்கது. அதற்கு எதிரான நல்லவனின் போராட்டம், அவனை அழிக்க நினைக்கும் மருத்துவத்துறைக் கும்பல். அவற்றில் காண்போரைப் பதைபதைக்கச் செய்யும் கதை வழிகள் இருக்கின்றன. ஓர் இயக்குநர் அதைத் துல்லியமாக உணர்கிறார். படம் வாணிக வெற்றிபெற்றால் அடையக்கூடிய வரவு கண்ணுக்குத் தெரிகிறது. முதலிடுவதற்கு ஒருவரோ பலரோ முன்வருகிறார்கள். நாயகனுக்கு அதில் தலைமைப் பண்புகள் வெளிப்படும் கதை வாய்ப்பு என்பதால் பெரிய நடிகர்கள் உடனே ஒப்புக்கொள்கிறார்கள். கதைக்கேற்ற பிற கலைஞர்கள் அமர்த்தப்படுகிறார்கள். படமாக்குவதற்குரிய பணியாளர்கள் தருவிக்கப்படுகிறார்கள். படக்குழுவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவரவர்களுடைய சங்கங்கள் வரையறுத்தவாறு ஊதியம் தரப்படும். திரைப்படக் கலைஞர்கள் தமக்குரிய புகழ்வெளிச்சத்தைப் பொறுத்து வாய்ப்பினையும் ஊதியத்தையும் பெறுகிறார்கள். கதைப் பாத்திரத்திற்குப் புதியவர்களைத் தேர்வதும் ஓர் இயக்குநரின் முடிவு. அல்லது அவர்க்குள்ள ஒரே வாய்ப்பு.

    Going for a shooting is not an easy task

    ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டவுடன் அப்படக்குழு படப்பிடிப்புக்குச் செல்லலாம். அதற்கு அவர்களிடம் திரைக்கதைக் கோப்பு முழுமையடைந்து இருந்தால் போதும். அந்தத் திரைக்கதையை எங்கெங்கே படம்பிடிப்பது என்பதை முதலில் வரையறுத்துக்கொள்கிறார்கள். ஐந்தாறு காட்சிகள் நகர்ப்புறத்திலும், பத்துப் பன்னிரண்டு காட்சிகள் மலையழகு கொஞ்சும் வெளிப்புறத்திலும், பத்திருபது காட்சிகள் வீட்டுக்குள்ளாகவும், மேலும் பல காட்சிகள் அலுவலகம், வீட்டு முகப்பு, சாலைப்புறம் ஆகிய பகுதிகளிலும் படம்பிடிக்கத் தகுந்தவையாக இருக்கும். படப்பிடிப்புக்கு வேண்டிய கருவிகளை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றார்கள்.

    படப்பிடிப்புக்குக் கிளம்புவதற்கு முன்னால் வெளிப்புறப் படப்பிடிப்புக்குரிய இடங்களைக் காண்பதற்காகவே நாட்கணக்கில் அலைவார்கள். ஓர் ஆற்றங்கரை, ஓர் அரசமரம், படகுத்துறை, அதையொட்டிய சிற்றூர் என்பது கதைக்களம் என்றால் அவ்வாறே தேடுவார்கள். தமக்குத் தேவையான இடங்களைப் பற்றிச் சொன்னதும் அத்தகைய இடங்களைக் காட்டுவதற்கு எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். "கொள்ளேகால்கிட்ட அப்படிப்பட்ட இடம் இருக்கு... கோபியில கொடிவேரிகிட்ட இருக்கிற இடமும் நல்லாருக்கும்... இரண்டும் வேணாம்னா ராஜமுந்திரிகிட்ட இருக்கிற இடம் உங்களுக்குப் பிடிக்கும்..." என்று பட்டியல் தருவார்கள். படப்பிடிப்புக்குக் கிளம்புவது என்பது மலையை நகர்த்துகின்ற வேலைதான். படப்பிடிப்புக்கு இடங்களைத் தேர்வதிலிருந்து ஒவ்வொருவர்க்கும் வண்டி ஏற்பாடு செய்வது வரையிலான அனைத்து இளநிலை வேலைகளையும் செய்வதற்குத் தயாரிப்பு நிர்வாகியின் தலைமையில் ஆழங்கால்பட்ட குழுவொன்று இருக்கும். கையிடுக்கில் ஒரு பணப்பையை வைத்துக்கொண்டிருப்பவர்களாக அவர்களைப் பல படங்களில் பார்த்திருப்போம். கல்லையும் கரைக்கின்றவாறு பேசுவதில் வல்லவர்கள் அவர்கள். அவர்களுடைய அணுகுமுறையில் எதிர்மறைப்போக்குக்கே இடமில்லை.

    பொதுவாக ஒரு திரைக்கதைக் கோப்பிலுள்ள அனைத்துத் தரவுகளும் ஓர் இயக்குநரின் மண்டைக்குள் தேங்கியிருக்கும். திங்கள் கணக்கில் ஆண்டுக் கணக்கில் அந்தத் திரைக்கதையோடு ஊறித் திளைத்தவராக அவர் இருப்பார். அவருடைய அனைத்து உதவியாளர்களும் அந்தத் திரைக்கதையில் தோய்ந்து நிற்பார்கள். "எட்டாவது சீன்ல ஓபனிங் ஷாட்ட நீயே எடுத்துட்டு வந்துடு..." என்று இயக்குநர் சொன்னால் அதை அவருடைய உதவியாளர் பிசகின்றிச் செயல்படுத்துவார். இயக்குநர் என்று பெயரளவுக்கு ஒருவர் இருக்க, முழுப்படத்தையும் ஓர் இணை இயக்குநரே எடுத்து முடித்த கதைகளைக் கோடம்பாக்கத்தில் கேட்கலாம்.

    அனைத்துக் கருவிகளையும் தொழிலாளர்களையும் ஏற்பாடு செய்தபின்பு அவர்களுக்கு வேண்டிய உணவு ஏற்பாடுகள், தங்குமிடங்கள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். திருமணக் கூட்டத்தைப் போன்ற ஒரு பட்டாளத்தை வெளியூரில் நாற்பது ஐம்பது நாள்களுக்குத் தங்க வைத்து வேலை வாங்கிக் காட்ட வேண்டும். இவற்றுக்கிடையே படப்பிடிப்பின்போது நடிகர்கள் அணிய வேண்டிய உடைகள், அரங்கப் பொருள்கள் ஆகியவற்றையும் ஒன்றுவிடாமல் பெட்டி கட்டிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் முடிவுற்ற நிலையில் படத்திற்கு வேண்டிய பாடல்களையும் பதிவு செய்வார்கள். அதனால்தான் ஒரு படத்தின் தொடக்கத்தை "இன்று பாடல் பதிவுடன் இனிதே தொடங்குகிறது" என்று அறிவிக்கிறார்கள். அதுவரை நடந்த அனைத்துப் படவேலைகளும் அந்தப் படம் தொடங்கப்பட்டதற்கான அறிவிப்பாகா. பாடல் பதிவு நடந்துவிட்டால் படம் தொடங்கிவிட்டது என்று பொருள். திரைப்பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதப்படுகின்றன. கதைச் சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டுப் பதிவாக்கப்படும் பாடல்களோடு அந்தப் படப்பிடிப்புக்குழு வெளியூர்க்குக் கிளம்புகிறது.

    நால்வர் இருந்தாலும் ஒரு படப்பிடிப்பை நடத்தலாம். நூற்றுக்கணக்கானவர்களோடும் ஒரு படப்பிடிப்பை நடத்தலாம். இறுதி விளைபொருளான அந்தப் படம் எப்படி அமைகிறது என்பதுதான் இன்றியமையாதது. படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டாலே அந்தப்படம் நிறைவடைந்துவிடும் என்பதற்கில்லை. எதிர்பாராத மழை, வெள்ளம், அரசியல் கலவரம் என்று எந்த வடிவத்திலும் இடையூறுகள் நேரலாம். குழுவில் ஒருவர் உடல்நலம் குன்றினாலும் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பே கெட்டுவிடும். தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு இடைஞ்சல்கள் எல்லா வடிவங்களிலும் தோன்றிக்கொண்டே இருக்கும். படப்பிடிப்புக்குச் சென்றபோது எத்தனையோ கலைஞர்கள் தொழிலாளர்கள் இறந்திருக்கின்றனர். 'சண்டியர்' படப்பிடிப்புக்காக தேனிக்கு வந்திறங்கிய படக்குழுவினரை ஓர் அரசியல் கட்சி இடைமறித்தது. அதனால் அந்தப் படப்பிடிப்புக் குழு வெறுங்கையோடு ஊர் திரும்பியது. அந்தக் குழறுபடியில் அறுபது இலட்சங்களுக்கும் மேலான இழப்பு என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் சென்று முதல் சுடுவு எடுக்கப்படும்போது ஓர் இயக்குநரின் கனவு நனவாகத் தொடங்குகிறது. ஆனால், கடைசி நாள் கடைசிக் காட்சி எடுத்து முடிக்கும்போதுதான் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்க்கு உயிரே திரும்பி வந்ததுபோல் இருக்கும்.

    English summary
    Going for a movie shoot is not an easy thing. It is really a very costly task for a producer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X