Good Bad Ugly Box Office: அமரன் பக்கத்துல கூட போக முடியாது.. மொத்தமாக சரிந்த குட் பேட் அக்லி வசூல்!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரியா வாரியர், சிம்ரன், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படத்தின் வசூல் 2வது வாரத்தில் பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதிலும், திங்கட்கிழமையான நேற்று வசூல் ஒட்டுமொத்தமாக டிராப் ஆகிவிட்டது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் மூலம் 100 கோடி வசூல் படத்தைக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரை வைத்து 200 கோடி வசூல் படத்தைக் கொடுத்துள்ளார். 300 கோடி வசூல் எல்லாம் குட் பேட் அக்லி திரைப்படம் நெருங்கவே வாய்ப்பில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டைத் தாண்டி உலகளவில் குட் பேட் அக்லி படத்துக்கு நல்லபடியான ஓபனிங் இருந்தது. ஆனால், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அஜித் குமார் படத்தை ரசிகர்கள் வரவேற்கவில்லை. ஃபேன் பாய் சம்பவம் படமாக இந்த படம் இருந்ததால் பல பழைய படங்களின் ரெஃபரன்ஸ்கள் தமிழ் ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆன அளவுக்கு மற்ற மாநில ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாததே இதற்கு காரணம் என்கின்றனர்.
கலவையான விமர்சனங்கள்: அஜித் குமார் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளியான படங்கள் எல்லாம் ரசிகர்களை கூட கவர முடியாத படங்களாக இருந்து வந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படத்தைக் கொடுத்தார் என பலரும் கொண்டாடினர். ஆனால், அதே சமயம் நல்ல கதையை எடுத்துக் கொண்டு அஜித்துக்கு ஆதிக் ரவிச்சந்திரன் படம் எடுக்கவில்லை என்றும் வெறும் தியேட்டர் மொமண்ட்டுகளை மட்டுமே நம்பி ரசிகர்களை ஏமாற்றும் மோசடியை தான் அவர் செய்துள்ளார் என சினிமா பிரபலங்களே சிலர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறைந்தது குட் பேட் அக்லி வசூல்: முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய குட் பேட் அக்லி திரைப்படம் அதிரடியாக தமிழ்நாட்டிலேயே 100 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் 200 கோடி வசூலையும் ஈட்டியதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. குட் பேட் அக்லி 200 கோடி வசூலை கடந்துள்ளது வேறலெவல் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், கடந்த வாரம் சச்சின் ரீ ரிலீஸ் ஆன நிலையில், குட் பேட் அக்லி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வசூலும் குறைந்துவிட்டது.
திங்கட்கிழமை டல்: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 6 கோடி மற்றும் 6.8 கோடியளவில் தான் வசூல் வந்தது. 10 கோடியை கூட தொடவில்லை. இந்நிலையில், திங்கட்கிழமையான நேற்று படம் வெளியான 12வது நாளில் இந்தியளவில் படத்துக்கான வசூல் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்குத்தான் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இந்தியாவில் மட்டும் குட் பேட் அக்லி படத்தின் வசூல் 139.70 கோடி என sacnilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.
அமரன் வசூலை நெருங்காது: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படத்தில் நல்ல கதை இருந்த நிலையில், தொடர்ந்து பல வாரங்கள் வெற்றிகரமாக அந்த படம் ஓடி 300 கோடி வசூலை கடந்தது. ஆனால், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் அதிகபட்சமாக 250 கோடி வசூலை கடக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











