லோகேஷின் ஃபார்முலாவை காப்பி அடித்த ஆதிக்.. குட் பேட் அக்லி வசூலை தூக்கிவிட்ட பழைய பாடல்கள்!
சென்னை: ஆதிக் சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, சிம்ரன், பிரியா வாரியர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியான நிலையில், படத்தின முக்கியமான காட்சியில் பழைய பாடலை வைத்து ஹைப்பை ஏற்றி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன், இது லோகேஷின் ஃபார்முலாவாச்சே இதக்கூடவா காப்பி அடிப்பீங்க என்று இணைவாசிகள் கேட்டு வருகின்றனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில், ரவுடிகள் எப்போது சிறையை உடைத்துக்கொண்டு வெளியில் வருவார்களோ என்ற ஒருவிதமான பயத்தில் ஆடியன்ஸ் இருக்க, அந்த நேரத்தில் ஜும்பலக்கா ஜும்பலக்கா என்ற பாட்டை போட்டு ஆடியன்ஸ் குஷிப்படுத்தி இருந்தார். அது ரசிக்கும் படி இருந்ததால், ரசிகர்கள் அதை வரவேற்றனர். அதே கைதி படத்தில் மற்றுமொரு காட்சியில், வில்லனான அர்ஜுன் தாஸ், சிறைக்குள் புகுந்து விட, ஜார்ஜ் குட்டி என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தோடு நிற்க ஆசை அதிகம் வெச்சு என்கிற பாடலை சேர்த்து அந்த காட்சியின் ஃப்ளேவரையே மாற்றியிருப்பார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: அதே போல, மாஸ்டர் படத்தில் புது நெல்லு புது நாத்து படத்தில் இருக்கும் கருத்த மச்சான் படத்தின் பாடல் வந்து இருக்கும். விக்ரம் படத்தில் லோகேஷுக்கு பிடித்த நடிகரான மன்சூர் அலிகான் ஆடிய சக்கு சக்கு வத்திக்குச்சி என்கிற பாடலை பேக் கிரவுண்டில் வைத்து இருப்பார். லியோ படத்தில் பசும்பொன் படத்தில் இருந்து தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் பாடலையும், கரு கரு கருப்பாயி பாடலையும் சண்டை காட்சியில் பயன்படுத்தி இருப்பார் இது உண்மையில் ரசிக்கும்படி இருந்ததால், மீண்டும் அந்த பாடல் இணையத்தில் டிரெண்டானது.

ஒத்த ரூபாய் தாரேன்: இதே ஃபார்முலாவை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அஜித் மும்பை சிறையில் சண்டை போடும் காட்சியில் கமல் நடித்த சகலகலா வல்லவன் படத்தில் வரும் இளமை இதோ இதோ பாடலை பயன்படுத்தி உள்ளார். அதே போல, அர்ஜுன் தாஸ் கப்பலில் ஒத்த ரூபா தாரேன் என்ற பாடலுக்கு அழகிகளுடன் சேர்த்து ஆட்டம் போட்டு இருப்பார். பின் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டை காட்சியில் ஒத்த ரூபாய் தாரேன் பாடலும் ஆலுமா டோலுமா பாடலும் இடம் பெற்று படத்திற்கு நல்ல VIbe கொடுத்து இருக்கும். இதோடு மட்டுமில்லாமல், எதிரும் புதிரும் திரைப்படத்தில் சிம்ரன் ஆடும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலை, அர்ஜுன் தாஸும் பிரியா வாரியரையும் ஆட வைத்து, இந்த காலத்து இளசுகளை ஆட்டம் போடவைத்துள்ளார்.

எரிச்சலா இருக்கு: எப்படியாவது ஒரு படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர்கள் புதுப்புது முயற்சிகளை கையில் எடுத்து இளசுகளை கவரும் முயற்சி செய்றாங்க என்பதெல்லாம் ரசிக்கக்கூடிய விஷயம் தான். ஆனால், பழைய பாடல்களை எல்லாம் தூசி தட்டி மீண்டும் படத்துல வைப்பதன் மூலம், பழைய பாடல்கள் தான் என்னைக்குமே மவுஸ் என்பதை சொல்லாமல் சொல்வதைப் போல தான் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். ஆனால், அதில் வரும்
'ஓஜி சம்பவம்', 'சவுண்டு ஏத்து மாமு' பாடலுக்கு இன்றைய காலத்து இளம்வட்டங்கள் வேண்டுமானால் ஆட்டம் போடலாம், ஆனால், மிடில் ஏஜ் உடையவர்களுக்கு இது போன்ற இசை எரிச்சலை ஏற்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் "என்ன எழவுடாஇது" என்று சொல்லத் தோன்றுகிறது.

ஒரே சத்தம்: அதிக சத்தத்தை கூட்டி, இதயத்துடிப்பை அதிகரித்து என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்கு நொடிக்கு நொடி மாறும் காட்சிகளும் இசையும் அஜித்தின் வெறிப்பிடித்த ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஒகே. ஆனால், சினிமா பிரியர்களுக்கு 'நாட் ஒகே'. அண்மையில் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட் செலவில் சூர்யாவின் நடிப்பில் கங்குவா படம் வெளியானது. அந்த படத்தின் மிகப்பெரிய மைனசே அதிக சத்தம் தான். கடைசியில் படம் வெளியாகி தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்த போதே சவுண்ட் குறைக்கப்பட்டது. அந்த படத்தின் தோல்விக்கு சவுண்ட் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதே போல குட் பேட் அக்லி படத்தில் பின்னணி இசை ஒரே சத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் படத்தில் பழைய ஹிட் பாடல்கள், வெற்றிப்பெற்ற படத்தின் வசனத்தை வைத்து ஆதிக் ரவிசந்திரன் இன்று வெற்றியை ருசித்து விட்டார். இருந்தாலும் இணையவாசிகள் லோகேஷின் ஃபார்முலாவை காப்பி அடித்துவிட்டார் ஆதிக் ரவிசந்திரன் என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

படத்தின் கதை: குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித், ரெட் டிராகன் என்ற பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். அந்த விஷயம் தெரியாமல் த்ரிஷா அவரை திருமணம் செய்து கொள்கிறார். த்ரிஷாவிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அப்பாவால் பையனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது, இப்படி அப்பா இருப்பது என் மகனுக்கு தெரியக்கூடாது. என் மகனை நீ பார்க்க வேண்டும் என்றால், ஒரு நல்ல அப்பாவாக மாறு என்று த்ரிஷா சொல்ல, அஜித் தன் மனைவி, குழந்தைக்காக போலீஸில் சரண் அடைந்து ஒரு நல்ல அப்பாவாக மாறுகிறார். தன் மகனின் 18 வது பிறந்த நாளுக்காக சிறையில் இருந்து வெளியே வருகிறார் அஜித். திரும்ப வரும்போதும், அஜித்தின் மகன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு, பொய் பழி சுமத்தப்பட்டு போதை பொருள் கடத்தல் வழக்கில் அவன் சிறைக்கு செல்கிறான்.
இதனால், மனம் உடைந்து போன த்ரிஷா, நீ திரும்பவும் வந்ததால் தான், என் மகனுக்கு பிரச்சனை, நீ இன்னும் திருந்தவே இல்லை, உன்னால் என் பையன் ஜெயிலுக்கு போய்விட்டான் என்று கதறுகிறாள். அப்புறம்தான் உள்ளே இறங்கிய அஜீத், தன்னோட மகனுக்காக மீண்டும் ரெட் டிராகனாக மாறி சம்பவம் செய்கிறார். அதன் பிறகு அஜித் மகனை எப்படி மீட்டார் என்பது தான் குட் பேட் அக்லி படத்தின் கதை.


Click it and Unblock the Notifications











