குட் பேட் அக்லி டிக்கெட் விலை 500 ரூபாயா?.. கடைசி நேரத்தில் பஞ்சாயத்து.. 9 மணிக்கு படம் வெளியாகுமா?
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, பிரபு, பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. துணிவு படமெல்லாம் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக் காட்சி வெளியானது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் 9 மணிக்குத்தான் வெளியாகிறது.
மல்டிபிளக்ஸ் மற்றும் தனி தியேட்டர்கள் என நேற்று இரவு காலை 9 மணிக்கான காட்சிகளுக்கான டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே புக் மை ஷோ சர்வர் கிராஷ் ஆகும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் முதல் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங்கை ஹவுஸ்ஃபுல் ஆக்கினர்.

இந்நிலையில், மதுரையில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்படமாட்டாது என்கிற பஞ்சாயத்தை விநியோகஸ்தர்கள் கிளப்பியுள்ளது அங்குள்ள அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
500 ரூபாய்க்கு டிக்கெட்: மதுரையில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட்டுகள் ஏற்கனவே மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள நிலையில், தனி திரையரங்குகளில் காலை 9 மணி காட்சிக்கு 500 ரூபாய்க்கு டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தால் தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பிரச்சனை வெடித்துள்ளதாகவும் அதன் காரணமாக 9 மணி காட்சி மதுரையில் திரையிடப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையிலும் டிக்கெட் விலை அதிகம்: அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்துக்கான டிக்கெட் புக்கிங் சென்னையில் சில தனி திரையரங்குகளில் இன்னமும் 9 மணிக்கான காட்சிகளை திரையரங்க நிர்வாகம் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங்கிற்காக ஓபன் செய்யவில்லை. மறைமுகமாக தியேட்டரில் வந்து ரசிகர்கள் 1000 ரூபாய் வரை டிக்கெட்டுகளை வாங்கி படம் பார்க்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
கட்டுப்படுத்த வேண்டும்: அஜித் குமார் நடித்துள்ள படத்தில் எழுந்திருக்கும் இந்த டிக்கெட் விலை பிரச்சனையை சீக்கிரமே கலந்து ஆலோசித்து கட்டுப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 190 ரூபாய் டிக்கெட்டுக்கு படம் திரையிடப்படும் நிலையில், அதே விலைக்குத்தான் தனி திரையரங்குகளும் டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் கிளம்பியுள்ளன.
சுமூக முடிவு: திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தால் மட்டுமே சீக்கிரம் சுமூக முடிவு ஏற்படும் என தெரிகிறது. இன்று மாலைக்குள் டிக்கெட் பிரச்சனையை சரி செய்து மதுரையில் படம் 9 மணிக்கு திட்டமிட்டப்படி வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே சியான் விக்ரமின் வீர தீர சூரன் 9 மணிக்கு வெளியாகாமல் மாலை 6 மணிக்கு மேல் வெளியான நிலையில், வசூலில் பலத்த அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் டிக்கெட் புக்கிங் டல்: விடாமுயற்சி தோல்வியின் எதிரொலி அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்திற்கும் எதிரொலிக்கிறது. அஜித் ரசிகர்கள் எல்லாமே 9 மணிக்கு படத்தை பார்த்தாக வேண்டும் என முதல் காட்சியை ஹவுஸ்ஃபுல் ஆக்கியுள்ளனர். ஆனால், அதன் பின் உள்ள காட்சிகள் இன்னமும் பெரிதாக டிக்கெட் புக்கிங் ஆகவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











