Exclusive - தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..சிம்ரன் மாதிரிலாம் நான் இல்லை..மனம் திறந்த ப்ரியா வாரியர்
சென்னை: அஜித்தின் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேசமயம் ஏகே ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக அமைந்துவிட்டது படம். இதுவரை உலகளவில் 170 கோடி ரூபாய்வரை குட் பேட் அக்லி வசூலித்திருப்பதாக சில இணையதளங்கள் தகவல்களை வெளியிட்டுவருகின்றன. இதனால் அஜித் ரசிகர்கள் ஹேப்பி மூடில் இருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவினரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் படத்தில் முக்கியமான ரோலை ஏற்று தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனம் ஆடியிருந்த ப்ரியா வாரியர் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் குட் பேட் அக்லி. முதன்முறையாக ஆதிக்குடன் அஜித் இணைந்ததால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவானது. மேலும் படத்தில் அவரது லுக் தொடர்பான போஸ்டர்கள் வெளியாகியும் அந்த ஹைப்பை அதிகரிக்கவே செய்தது. இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், ப்ரியா வாரியர், சிம்ரன், பிரசன்னா, சுனில் என ஏகப்பட்டபேர் நடித்திருந்தார்கள். கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவது GBU ரிலீஸானது. அஜித் ரசிகர்களை பொறுத்தவரை படம் ஆத்ம திருப்தியை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு சீனிலும் ஃபேன் பாய் மொமண்ட்ஸை இயக்குநர் ஆதிக் வைத்திருக்கிறார் என்று கொண்டாடிவருகின்றனர்.

கலவையான விமர்சனம்தான்: அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு படம் முழு திருப்தியை அளிக்கவில்லை. படத்தில் கதை என்ற ஒன்று இல்லவே இல்லை. அஜித்துடைய பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை அடுக்கி வைத்திருக்கிறார். தேவையில்லாமல் அது ஓவர் டோஸாகிவிட்டது;முக்கியமாக வில்லனுக்கு எதற்காக ரெட்ரோ சாங்கை வைத்தார்; சரி ஒரு பாடல்தான் என்றால் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அது மாதிரியான பாடல்களை வைத்திருப்பதெல்லாம் அவசியமில்லாதது என்று கழுவி ஊற்றிவருகிறார்கள். மேலும் இதே மாதிரியான படங்கள்தான் இனி தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்குமோ என்றும் திரை ஆர்வலர்கள் அச்சத்துடன் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா: ஒருபக்கம் படத்தில் இடம்பெற்ற ரெட்ரோ பாடல்கள் தேவையில்லாத ஒன்று என ஒருதரப்பினர் கூறுகிறார்கள். இன்னொரு தரப்பினரோ அந்தப் பாடல்களை இயக்குநர் அருமையாக ப்ளேஸ் செய்திருக்கிறார் என்று கொண்டாடிவருகிறார்கள். முக்கியமாக அர்ஜுன் தாஸும், ப்ரியா வாரியரும் படத்தில் ஒரு இடத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடுவார்கள். ஒரிஜினல் பாடலில் சிம்ரன் என்ன மாதிரியான காஸ்ட்யூம் அணிந்திருந்தாரோ அதே மாதிரியான காஸ்ட்யூமை ப்ரியாவும் அணிந்திருந்தார். மேலும் அதே டான்ஸ் ஸ்டெப்புகளையும் அவர் போட்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இந்தக் காலத்து சிம்ரனாகிவிட்டார் ப்ரியா வாரியர்; அட்டகாசமாக நடனமாடியிருக்கிறார் என்றெல்லாம் புகழ்ந்துதள்ளுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியா வாரியர் பேட்டி: இந்நிலையில் ப்ரியா வாரியர் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் எனது அம்மா சில காலம் கோவையில்தான் வளர்ந்தார். நானும் அங்குதான் கொஞ்ச காலம் படித்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வரும்போது சன் டிவிதான் ஓடிக்கொண்டிருக்கும். அந்த சேனலில் வரும் சீரியல்களை எனது அம்மா ஒன்றுவிடாமல் பார்த்துக்கொண்டிருப்பார். அப்போதிருந்து எனக்கும் தமிழ் ஒட்டிகொண்டது. அதன் காரணமாகத்தான் என்னால் ஓரளவுக்கு நன்றாகவே தமிழ் பேச முடிகிறது என்று நினைக்கிறேன்.
எப்படி வாய்ப்பு வந்தது?: குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்காக முதலில் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிலிருந்துதான் ஃபோன் செய்து நேரில் வந்து பார்க்கும்படி சொன்னார்கள். நானும் சென்று பார்த்தேன். அப்போது என்னிடம் படத்தின் முழு கதையையும் இயக்குநர் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டர் என்ன; அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி மட்டும்தான் எனக்கு சொல்லப்பட்டது. பொதுவாக ஹீரோயின் வேடம் இல்லாமல் இந்த மாதிரியான கேரக்டர்களை ஏற்கும் நடிகைகளிடம் முழு கதையும் சொல்லப்படமாட்டாது என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். அதனால் அதனை நான் எதிர்பார்த்துதான் சென்றிருந்தேன். எனது கேரக்டர் பிடித்திருந்தது நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன்.
அர்ஜுன் தாஸூடனான கெமிஸ்ட்ரி: படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கான நடன பயிற்சியின்போதுதான் அர்ஜுன் தாஸை நான் முதன்முதலாக சந்தித்தேன். எங்கள் இரண்டு பேருக்குமே அதுதான் ஐஸ் பிரேக் மொமண்ட்டாக இருந்தது. ஏனெனில் அந்தப் பாடலில் எங்கள் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். மொத்தம் அந்தப் பாடலுக்காக மூன்று நாட்கள் நாங்கள் ஒத்திகை பார்த்தோம். முதல் நாளிலேயே நாங்கள் இரண்டு பேருமே இயல்பாக பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். அதன் காரணமாகத்தான் படத்தில் நாங்கள் ஆடும்போது எங்களுக்குள் நல்ல விதமாக கெமிஸ்ட்ரி அமைந்துவிட்டதாக கருதுகிறேன்.

என்னை வாழ்த்திய சிம்ரன்: இதற்கு முன்னதாக நான் அந்தப் பாடலின் வீடியோவை ஒருமுறைகூட பார்த்ததில்லை. அதேசமயம் அந்தப் பாடல் எவ்வளவு ஹிட்டாகியிருக்கிறது; அது பலருக்கும் எவ்வளவு பிடிக்கும் என்பது எனக்கு தெரிந்திருந்தது. சிம்ரன் மாதிரியே ஆட வேண்டும் என்கிற பிரஷரை நான் எடுத்திருந்தால் கண்டிப்பாக என்னால் ஒழுங்காக ஆடியிருக்க முடியாது. நாளை ஷூட் என்றால் இன்றுதான் அந்தப் பாடலின் வீடியோவை நான் பார்த்தேன். இன்ஸ்டாகிராமில் சிம்ரன் மேடமை மென்ஷன் செய்து ஸ்டோரி போட்டிருந்தேன். அதனை கவனித்த அவர் இன்ஸ்டாகிராமில் என்னிடம், 'அந்தப் பாடலுக்கு நன்றாக நடனமாடியிருந்தீர்கள்' என்று என்னை வாழ்த்தினார்.
சிம்ரன் மாதிரிலாம் நான் இல்லைங்க: அந்தப் பாடலை நாங்கள் ரீ க்ரியேட்தான் செய்தோம். சிம்ரனை நான் ரீப்ளேஸ் எல்லாம் செய்யவே இல்லை. செய்யவே முடியாது. அவர் மாதிரிலாம் என்னால் எப்போதும் ஆடவே முடியாது. சிம்ரன் என்றால் ஒரே ஒரு சிம்ரன்தான். மேலும் அந்தப் பாடலில் அஜித்தும் தோன்றி சின்ன ஸ்டெப் ஒன்றை போட்டிருந்தார். அஜித்துடன் பழகுவதற்கு அவ்வளவு ஈசியாக இருக்கும். அவரிடம் டென்ஷனாகவோ, ஸ்ட்ரெஸ்ஸாகவோ இருக்க அவசியமில்லை. அவர் எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். பழகுவதற்கு எப்படி ஈசியாக இருக்குமோ அதேபோல்தான் அவருடன் நடிப்பதற்கும் ரொம்பவே ஈசியாக இருக்கும்.
இதுதான் முதன்முறை: பெரிய ஸ்டார் படத்தில் நடித்துவிட்டு அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தது இதுதான் முதன்முறை. அது எனக்கு ரொம்பவே புதுமையாக இருந்தது. முக்கியமாக முதல் காட்சியில்தான் கரெக்ட்டான விமர்சனங்கள் வெளியே வரும் என்பது எனது கருத்து" என்றார். மேலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசுகையில், 'தனுஷ் இயக்கத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எனக்கு நடித்தெல்லாம் காண்பிக்கவில்லை. என்னை அவர் செலக்ட் செய்யும்போதே உங்கள் ஸ்டைலில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றுதான் சொன்னார். NEEK படத்தில் நடித்ததும் அற்புதமான அனுபவம்" என்றார்.


Click it and Unblock the Notifications











