தீபாவளிப் படங்கள்... அமோக புக்கிங்... ஒரு வாரத்துக்கு ஃபுல்!
சென்னை: தீபாவளிக்கு வெளியாகும் மூன்று படங்களுக்கும் புக்கிங் அமோகமாக நடந்து வருகிறது.
ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் மூன்று படங்களுக்குமே விற்றுத் தீர்ந்துள்ளது, படத்தின் தயாரிப்பாளர்களையும் தியேட்டர்களாரர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வார இறுதியில்
தீபாவளிப் பண்டிகை என்பது, தமிழ் சினிமாவின் முக்கியமான சீசன்களில் ஒன்று. பொதுவாக தீபாவளி வாரநாட்களில் வரும்... கூடவே சனி, ஞாயிறும் சேர்ந்து கொள்ள பெரிய விடுமுறை காலமாக இருக்கும்.
இந்த முறையோ, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தீபாவளியும் நோன்பும் வருகின்றன.

அச்சம்
இதனால் மூன்று நாட்களோடு தீபாவளி சீசன் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர் தீபாவளிக்கு படத்தை வெளியிடுபவர்கள்.
ஆனால் இந்த சீசனுக்கு வரும் ஆரம்பம், ஆல் இன் அழகுராஜா மற்றும் பாண்டிய நாடு படங்களுக்கு செய்யப்பட்டு வரும் மிகப் பெரிய விளம்பரங்கள், ரசிகர்கள் மத்தியில் அந்தப் படங்களை முதலில் பார்த்துவிடும் மனநிலைக்குத் தள்ளியுள்ளன.
இதன் விளைவு, மூன்று படங்களுக்குமே நல்ல ஓப்பனிங் அமைந்துள்ளது.

நல்ல ஆரம்பம்
ஆரம்பம் படம் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னதாக வருகிற 31-ந் தேதி ரிலீசாகிறது. தியேட்டர்களில் இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிவிட்டது. முதல் நாளிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. 'ஆரம்பம்' படம் சென்னையில் 30 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

ஆல் இன் ஆல் அழகுராஜா
'ஆல் இன் ஆல் அழகுராஜா' படமும், 'பாண்டியநாடு' படமும் 2-ந்தேதி தீபாவளியன்று வெளியாகிறது. 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கும் ஒரு வாரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இந்தப் படத்துக்கும் கிட்டத்தட்ட 30 அரங்குகள் கிடைத்துள்ளன.

பாண்டிய நாடு
பாண்டிய நாடு படத்துக்கு நாளை முதல் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. ஆனால் இந்தப் படத்துக்கு டிக்கெட் குறித்த விசாரணையை வைத்துப் பார்க்கும்போது, நாளையே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுவிடும் என நம்புகின்றனர் தியேட்டர்கார்கள்.
மூன்று படங்களுக்குமே யு சான்று வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications