முதல் தலித் ஹீரோயின் .. டூடுல் வெளியிட்ட கூகுள் - யார் இந்த பி.கே. ரோஸி?
சென்னை: முதல் மலையாள நடிகையான பி.கே. ரோஸிக்கு கூகுள் நிறுவனம்டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அவர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
நவீன உலகம் என்று கூறப்படும் தற்போதே பெண்கள் ஏகப்பட்ட அடக்குமுறைகளை சந்தித்துவருகின்றனர். இப்போதே நிலைமை இப்படி இருக்கும்போது பிற்போக்குத்தனங்கள் முழுவதுமாக இருந்த காலகட்டத்தில் பெண்கள் சந்தித்த அடக்குறைகள் சொல்லுக்குள் அடங்காது. குறிப்பாக பெண்கள் பல துறைகளில் கால் பதித்தாலும் சினிமாவில் கால் பதிக்க இப்போதும் அஞ்சுகிறார்கள். ஏனெனில் சினிமாவில் நடிக்கும் பெண்களின் கேரக்டரை பலர் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். இப்போதே இப்படி என்றால் அந்தக் காலத்தில் ஒரு பெண் அதிலும் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் சினிமாவில் காலடி எடுத்து வைப்பது எவ்வளவு பெரிய காரியம்

தடைகளை உடைத்த பி.கே. ரோஸி
1903ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி கேரளாவில் பிறந்தவர் பி.கே. ரோஸி. இவரது பெற்றோர் தினக்கூலிகள் ஆவர். பட்டியலினத்தைச் சேர்ந்த ரோஸிக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆர்வம்.
இதனைத் தொடர்ந்து தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கிய ரோஸி 1928ஆம் ஆண்டு ஜே.சி.டேனியல் என்பவரின் இயக்கத்தில் வெளியான விகதகுமாரன் என்ற படத்தில் சரோஜினி நாயர் என்ற வேடத்தில் நடித்தார். இதன் மூலம் மலையாள திரையுலகின் முதல் பெண் கதாநாயகி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

திரையரங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
பட்டியலினத்தை சேர்ந்த ஒரு பெண் திரையில் தோன்றியதும் அதிகாரவர்க்கத்தினருக்கும் தாங்க முடியவில்லை. எனவே ரோஸி நடித்த படத்தை காண வரக்கூடாது என திரையரங்கின் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.

தமிழ்நாட்டிற்கு வந்த ரோஸி
இப்படி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த ரோஸி, கேசவப்பிள்ளை என்பவரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிற்கு வந்து ராஜம்மாள் என்ற பெயரில் வாழ்ந்திருக்கிறார். அதன் பிறகு 1988ஆம் ஆண்டு ரோஸி உயிரிழந்திருக்கிறார். இன்று அவரது 120ஆவது பிறந்தநாள் ஆகும்.

பி.கே. ரோஸிக்கு டூடுல் வெளியிட்ட கூகுள்
இந்நிலையில், அடக்குமுறைகளை கடந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த பி.கே.ரோஸியை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம், ரோஸிக்கு டூடுல் வெளியிட்டு கௌரவித்துள்ளது. மேலும் பலர் ரோஸி குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வமாகவும் இருக்கின்றனர். சமூக வலைதளங்களிலும் அவரது புகைப்படத்தை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











