நடிகைகளை ஐட்டம்னு எப்படி சொல்லலாம்.. சென்சார் அதையெல்லாம் பார்ப்பதே இல்லை.. கோபி நயினார் நெத்தியடி!
சென்னை: அறம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். முதல் படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து தரமான சம்பவத்தை செய்திருந்தார். அதன் பின்னர் வரிசையாக பல நல்ல தரமான படங்களை கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பல வருட இடைவேளை கழித்து ஆண்ட்ரியாவை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி உள்ள மனுஷி படத்தை கோபி நயினார் இயக்கியுள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரியளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தியா குறித்தும் இந்தியாவில் சொந்த மக்கள் மீதே ஏவப்படும் அடக்குமுறைகள் குறித்தும் இந்த படத்தில் காத்திரமாக பேசியிருப்பதாக தனது சமீபத்திய பேட்டியில் கோபி நயினார் கூறியுள்ளார்.
நயன்தாராவின் அறம்: கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த அறம் திரைப்படம் வெளியானது. லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்கு நீதி செய்யும் வகையில் இந்த படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து கலக்கியிருப்பார். அறம் 2 திரைப்படம் எல்லாம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதன் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

ராக்கெட் விடும் ஊரில்: விண்வெளிக்கே ராக்கெட் விட்டு நிலவில் கொடி நடும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் ராக்கெட் விடும் ஊருக்கு அருகே ஆழ்துளை கிணற்றின் பள்ளத்தில் விழுந்து சிக்கிக் கொள்ளும் சிறுமியை காப்பாற்ற இங்கே எந்தவொரு கருவியோ வளர்ச்சியோ இல்லை என்பதை நெத்தி பொட்டில் அடித்தாற் போல சுட்டிக் காட்டி கோபி நயினார் எடுத்த அறம் படம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஆண்ட்ரியாவை வைத்து மனுசி: தீவிரவாதிகளுக்கு எப்படி அடைக்கலம் தரலாம் என ஒரு ஆசிரியையும் அவரது குடும்பத்தினரையும் சில போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்குள் ஹவுஸ் அரெஸ்ட் செய்து விசாரிக்கும் படமாக மனுஷி உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா லீடு ரோலில் நடித்துள்ளார். அவருடைய அப்பாவாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார். நாசர், தமிழரசன் உள்ளிட்ட பலர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். அந்த படத்தின் புரமோஷனுக்காக தற்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் கோபி நயினார் வெளிப்படையாக பல விஷயங்களை துணிச்சலாக பேசி வருகிறார்.

சிலரை மட்டுமே வளர்த்துவிடும் ஹீரோக்கள்: நல்ல கதைகள், நல்ல படங்களை பண்ணுகிறவர்களை கண்டுக் கொள்வதை விட சிலரை மட்டுமே சினிமாவில் பெரிய ஹீரோக்கள் வளர்த்து விடுகின்றனர். தங்களுக்கு யார் செட்டாவார்களோ அவர்களுடன் மட்டுமே பயணிக்கும் புத்தி உள்ளது எனக் கூறியுள்ளார். நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் தான் தன்னை நம்பி படம் கொடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
ஐட்டம்னு சொல்லலாமா?: சினிமாவில் அது என்ன சார் ஐட்டம் டான்ஸ். நடிகைகளை ஐட்டம்னு சொல்லலாமா? இதையெல்லாம் தணிக்கை குழு எப்படி அனுமதிக்கிறது என்றே தெரியவில்லை. நடிகைகள் மோசமான உடைகளை அணிந்து கொண்டு சினிமாவில் குத்தாட்டம் போடும் போது என்னுடைய மகளுடன் உட்கார்ந்து அந்த பாடல்களை பார்க்க முடியவில்லை. அதற்கெல்லாம் தணிக்கை குழு எந்த தடையும் சொல்லாது. கருத்துள்ள படங்களுக்கு மட்டும் அதை சொல்லக் கூடாது. இதை சொல்லக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்து பல வெட்டுகளை செய்யும் என்றும் துணிச்சலாக கோபி நயினார் பேசி தனது ஆதங்கத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











