Goundamani: 84 வயதில்.. தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி.. ஒத்த ஓட்டு முத்தையா விரைவில் வருது!
சென்னை: நாடு முழுவதும் லோக் சபா தேர்தல் ஃபீவர் தொற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் "ஒத்த ஓட்டு முத்தையா" படத்தின் டப்பிங் பணிகளை வேகமாக்கி உள்ளார் கவுண்டமணி. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான கவுண்டமணிக்கு தற்போது 84 வயதாகிறது. இந்த வயதிலும் ஹீரோவாக நடிக்க முடியும் என நடித்து அசத்தி வருகிறார் கவுண்டமணி.
ஷாஷி பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு நடிப்பில் ஒத்த ஓட்டு முத்தையா படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார்.

யோகி பாபு மண்டேலா படத்தில் நடித்து முடித்த நிலையில், அதைப் போலவே தேர்தலை மையப்படுத்திய "ஒத்த ஓட்டு முத்தையா" படத்தில் நடித்து வருகிறார்.
84 வயதாகும் கவுண்டமணி: நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் கார் டிரைவராக நடித்து சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவுண்டமணி தமிழ் சினிமாவின் இணையற்ற காமெடி நடிகராக மாறினார். கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தாள், உள்ளத்தை அள்ளித்தா, மன்னன் என பல படங்களில் கவுண்டமணியின் காமெடி இன்றளவும் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி வருகிறது. 84 வயதாகும் நிலையிலும் கவுண்டமணி தான் இந்த படத்தை பண்ணியே ஆகவேண்டும் என இயக்குநர் அவரை தொடர்ந்து துரத்திய நிலையில், கடைசியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அரசியல் படங்கள்: 2015ம் ஆண்டு 49 - ஓ எனும் அரசியல் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் கவுண்டமணி. 2016ம் ஆண்டு எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்திலும் நடித்தார். ஆனால், அதன் பின்னர் நடிப்பில் இருந்து விலகி இருந்த கவுண்டமணி மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தற்போது அரசியல் சம்பந்தப்பட்ட "ஒத்த ஓட்டு முத்தையா" படத்தில் நடித்துள்ளார்.
8 மணி நேர டப்பிங்: "ஒத்த ஓட்டு முத்தையா" படத்தை சீக்கிரம் வெளியிடுவதற்காக படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தொடர்ந்து 8 மணி நேரம் அந்த படத்துக்காக டப்பிங் பேசி கொடுத்திருக்கிறார் கவுண்டமணி. அதை பார்த்த சினிமா பிரபலங்கள் இந்த வயதிலும் சினிமாவில் எவ்வளவு சின்சியராக உள்ளார் என பாராட்டி வருகின்றனர்.
சொத்து மீட்பு: 1998 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ அபிராமி அறக்கட்டளை நிறுவனத்துடன் நடிகர் கவுண்டமணிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இருந்து வந்த சொத்து பிரச்சனை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து அவரது நிலத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த சந்தோஷத்திலேயே கூடுதல் எனர்ஜி வந்து ஒரே மூச்சில் டப்பிங் பேசியிருப்பார் கவுண்டமணி என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











