Goundamani: யோகி பாபுவை கொத்தாக தூக்கிய கவுண்டமணி... ஒத்த ஓட்டு முத்தையா ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளை!
சென்னை: கோலிவுட்டின் நக்கல் மன்னன் கவுண்டமணி சமீப காலமாக படங்களில் அதிகம் நடிப்பதில்லை. பொள்ளாச்சி மாப்பிள்ளை, 49-O, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, வாய்மை போன்ற படங்களில் மட்டும் நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கம்பேக் கொடுக்கும் கவுண்டர்
தமிழ் சினிமாவில் கவுண்டர் கிங், நக்கல் மன்னன் என பெயர் எடுத்தவர் கவுண்டமணி. 90களில் வெளியான பெரும்பாலான படங்களில் கவுண்டமணியின் காமெடி தான் சூப்பர் ஹிட் அடித்தது. ஹீரோவுக்கு முன்பே கவுண்டமணியின் கால்ஷீட் வாங்கிவிடுவார்கள் இயக்குநர்கள். அந்தளவுக்கு பிஸியாக இருந்த கவுண்டமணி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் காமெடி கலாட்டா செய்துள்ளார்.

2000ம் ஆண்டுக்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதை மெல்ல மெல்ல குறைத்துக்கொண்ட கவுண்டமணி, ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் கவுண்டமணி. அதன்படி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து நடித்துள்ளார். சினி கிராஃப்ட் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுண்டமணி தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் யோகி பாபு மட்டுமின்றி சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல் மூன்று இளம் ஜோடிகள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சிங்க முத்து மகன் வாசன் கார்த்தி, மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி, சாய் தான்யா, மறைந்த நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ், அவருக்கு ஜோடியாக அபர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் கவுண்டமணி அரசியல்வாதியாக நடித்துள்ளாராம். அரசியலில் ஏற்படும் பிரச்சனைகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் இந்த இரண்டையும் கவுண்டமணி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதை என சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது ஒத்த ஓட்டு முத்தையா ஷூட்டிங் முடிவுக்கு வந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு நாள் பார்த்து வருகிறதாம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் கவுண்டமணி என்ட்ரி கொடுக்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இதனிடையே ஒத்த ஓட்டு முத்தையா படப்பிடிப்பின் போது கவுண்டமணி, யோகி பாபு இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











