உடல்நிலை பற்றி திடீர் வதந்தி.. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
சென்னை: நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து வதந்தி பரவியதை அடுத்து அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரப்புவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
பிறகு சம்பந்தப்பட்டவர்கள் அதுகுறித்து விளக்கம் தருவது வழக்கமாக இருக்கிறது.

உடல்நலம் வதந்தி
இந்நிலையில், பிரபல நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவறான தகவல்
இந்நிலையில், அது தவறான தகவல் என்று கவுண்டமணி தரப்பில் கூறப்பட்டது. 'கவுண்டமணி நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் உடல்நிலை பற்றி தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான போலீசில் புகார் அளிக்க இருக்கிறோம்.

நீக்க வேண்டும்
அவர் பற்றி தவறானத் தகவலை வெளியிட்டுள்ள யூடியூப் சேனல், அந்த தகவலை, உடனடியாக நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நடிகர் கவுண்டமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கவுண்டமணி தரப்பு அறிக்கையும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது.

கமிஷனரிடம் புகார்
இந்நிலையில், தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கவுண்டமணியின் வழக்கறிஞர் சார்பில், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தான் குடும்பத்துடன் நன்றாக இருப்பதாகவும் இதுபோன்ற வதந்திகளால் நிம்மதி கெடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











