கவுண்டமணியின் கதைகள்.. நடிகையும், இயக்குநரும் அய்யோ பாவம்.. கவுண்ட்டர் மகான் சிதைச்சிவிட்ருக்காரே
சென்னை: கவுண்டமணி என்றாலே அனைவரது முகத்திலும் சிரிப்புதான் வரும். கேமராவுக்கு முன் மட்டுமின்றி கேமராவுக்கு பின்னாலும் அவர் அடித்த கவுண்ட்டர்கள் எல்லாம் சிரிப்பு சரவெடி ரகம்தான். அது பெரும்பாலும் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. இந்நிலையில் அப்படி அவர் செய்த ஒரு தரமான சம்பவம் குறித்து இதில் பார்க்கலாம்.
உடுமைலைப்பேட்டையை பூர்வீகமாகக் கொண்டவர் கவுண்டமணி. அவருக்கு நடிக்கும் ஆர்வம் வந்ததை தொடர்ந்து நாடகங்களில் நடித்து தன்னுடைய வாழ்க்கையை உயர்த்துவதற்கு முடிவு செய்தார். அதன்படி நாடகங்களில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அட்டகாசமாக காமெடி செய்து அனைவரையுமே சிரிக்க வைத்துக்கொண்டிருந்த அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
சர்வர் சுந்தரம்: அதன்படி சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் சிறிய வேடம் ஒன்று கிடைத்தது. யானை பசிக்கு சோள பொறி போன்றுதான் அவரது திறமைக்கு தீனி போடும் அளவுக்கு அந்த ரோல் அமையவில்லை. அதனையடுத்துதான் நாடகத்தில் பணியாற்றியபோது பழக்கமான பாக்யராஜின் மூலமாக 16 வயதினிலே திரைப்படத்தில் சரியான அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகத்துக்கு பிறகு கவுண்டமணியின் வாழ்க்கை ஏறுமுகம்தான்.

அப்போதே ஃபார்முலா செட் செய்தவர்: அப்படத்துக்கு பிறகு அவர் நடித்த ஒவ்வொரு படமும் கொண்டாட்டம்தான். போதாக்குறைக்கு அவருடன் செந்திலும் சேர்ந்துகொண்டார். இரண்டு பேரும் சேர்ந்து பலரது வயிறை வலிக்க வைத்திருக்கிறார்கள். பொதுவாக திரைத்துறையில் ஒரு பேச்சு உண்டு. அதாவது ஒரு நாளுக்கு சம்பளம் என்ற ஃபார்முலாவை வடிவேலுதான் பிரபலப்படுத்தினார் என்று. ஆனால் அவருக்கு முன்னதாகவே அதற்கு விதை போட்டது என்னவோ கவுண்டமணிதான். அவர் பீக்கில் இருந்தபோது ஒரு நாளில் எட்டு மணி நேரம் நடித்தால் சம்பளமாக லட்சம் ரூபாய்வரை கொடுக்கப்பட்டது.
பரந்த பார்வை: அதேபோல் அவரது காமெடி காலங்கடந்து கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமே அவருக்குள் இருந்த பரந்த பார்வைதான். அப்போதே அவர் பார்ப்பது பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள்தான். மேலும் உலக அரசியல், நடப்புகள் என அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பார். அந்த அனுபவங்களின் அடிப்படையில்தான் தன்னுடைய ஒவ்வொரு காமெடியிலும் ஏதோவொரு புதுமையையும், நாட்டு நடப்புகளையும் வைத்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஆஃப் கேமரா அலப்பறைகள்: கேமரா ஆனில் இருக்கும்போது கவுண்டமணியின் கவுண்ட்டர்கள் எல்லாம் எப்படி பட்டாசு ரகமோ அதேபோல்தான் ஆஃப் கேமராவிலும். அவரிடம் சிக்கி பலர் சின்னாபின்னமாகியிருக்கிறார்கள். ஒருமுறை சத்யராஜுடம் படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அந்த ஷூட்டிங் இடைவேளையில் ஹீரோயின் இவரிடம் வந்து, 'சார் எனது தம்பி ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். இதுதான் போஸ்டர் என்று காண்பித்து, 'சார் எனது தம்பி நன்றாக வந்துவிடுவானா என கேட்க; டக்கென்று இவரோ, 'வந்துடுவான் ம்மா ஆட்டோ பிடிச்சு ஷூட்டிங் முடிந்ததும் நன்றாக வீட்டுக்கு வந்துவிடுவான்' என்று கலாய்த்துவிட்டாராம். அந்த நடிகைக்கு ஒருமாதிரி ஆகிவிட்டதாம்.
அதேபோல் இயக்குநர் ஒருவர் கவுண்டமணியிடம் வந்து, 'அண்ணே நான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறேன். எனக்கு பெரிதாக எந்த விருப்பமும் இல்லை. போன வாரம் ஒரு பள்ளிக்கு கெஸ்ட்டாக போயிருந்தேன். அப்போது அங்கிருந்த பிள்ளைகள் எல்லாம் என்னை பார்த்து நீங்கள் ஹீரோவாக நடிக்கலாமே என்று சொன்னார்கள். அதான் ஹீரோவாக நடிப்பது என்று இறங்கிவிட்டேன்' என்று ஆர்வத்தோடு சொன்னாராம். அதற்கு கவுண்ட்டர் மகானோ, 'ஏன் நீங்க கெஸ்ட்டா போன ஸ்கூல் பார்வை திறன் இல்லாத குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடமா' என்று கேட்டு வைக்க; அய்யோ இவரிடம் சிக்கினால் அவ்வளவுதான் என சொல்லி இடத்தை காலி செய்துவிட்டு போய்விட்டாராம்.


Click it and Unblock the Notifications











