83 வயதில் மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போகிறாரா கவுண்டமணி.. இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுத்து வரும் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி மீண்டும் நடிக்க வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே சிவகார்த்திகேயனின் படத்தில் பெரியப்பாவாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஒரு புதிய படத்தில் மீண்டும் ஹீரோவாகவே கவுண்டமணி நடிக்க உள்ளதாக பரபரப்பு பேச்சுக்கள் எழுந்துள்ளன.

கவுண்டமணி ரிட்டர்ன்ஸ்
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுக்கவுள்ள நிலையில், காமெடி லெஜண்ட் கவுண்டமணியும் விரைவில் சினிமாவில் பிசியான நடிகராக மாறப் போகிறார் என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரு புதிய படத்தில் ஹீரோவாகவே அவர் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன் கோரிக்கை
சினிமாவை விட்டு விலகி இருக்கும் நடிகர் கவுண்டமணியை சமீபத்தில் சந்தித்து மணிக்கணக்கில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் தனது படத்தில் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அடுத்த தகவலாக பேயை காணோம் படத்தின் இயக்குநர் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிற ஹாட் அப்டேட்டும் கிடைத்துள்ளது.

83 வயதில் ஹீரோ
80 வயதிலும் நடிகர் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், 83 வயதில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கப் போகிறாராம். பேயை காணோம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் செல்வா அன்பரசன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் கவுண்டமணி நடிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர்.

மீரா மிதுன் படம்
போலீஸார் வலையிலேயே சிக்காமல் இன்னமும் தலைமறைவாக உள்ள பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுனை வைத்து பேயை காணோம் என்கிற பேய் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் செல்வா அன்பரசன். அவரது இயக்கத்தில் தான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் காமெடி மன்னன் நடிக்க உள்ளாராம்.

கழுதை மேய்ப்பவராக
செல்வா அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்க உள்ள வித்தியாசமான படத்தில் அவர் கழுதை மேய்ப்பவராக நடிக்க போகிறாராம். அரசியல் நய்யாண்டி உள்ளிட்ட விஷயங்களும் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை உள்ளிட்ட படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டமணி நடித்திருந்தார்.

ஒரு பக்கம் செந்தில்
90களில் வெளியான பல படங்களில் ஹீரோ யார் என்பதை விட கவுண்டமணி, செந்தில் இருக்காங்களா என்றே ரசிகர்கள் பார்த்து தியேட்டருக்கு போனார்கள். ஒரு பக்கம் பாபி சிம்ஹாவின் படத்தில் செந்தில் நடித்து வரும் நிலையில், மீண்டும் கவுண்டமணி சினிமாவில் கம்பேக் கொடுத்தால் அவரது ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய சந்தோஷத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











