எல்லோரும் மிரட்டுறாங்க.. கவுண்டம்பாளையம் ரிலீஸ் கேன்சல்.. கடவுள் இருக்காரு.. ரஞ்சித்துக்கு சோதனை
சென்னை: தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த ரஞ்சித் இப்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். நாடக காதலுக்கு எதிரான படம் என்று அவர் ஒவ்வொரு பேட்டியிலும் பேசிவந்த சூழலில் படம் இன்று ரிலீஸாவதாக இருந்தது. அதற்கான டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியது. ஆனால் திடீரென கவுண்டம்பாளையம் படம் ரிலீஸாகாது என்றும்; எல்லோரும் மிரட்டுகிறார்கள் என்றும் ரஞ்சித் செய்தியாளர்களிடம் சோகத்துடன் சொல்லியிருக்கிறார்.
ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த வள்ளி திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ராமன். இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் நடிகர் ரஞ்சித். ரஞ்சித்தும் கோலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்ததில் சேரன் இயக்கிய பாண்டவர் பூமி திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து சினிமாக்களில் நடித்த அவர்; திடீரென ப்ரியா ராமனை விவாகரத்து செய்தார். காதலித்து திருமணம் செய்த பிறகும் விவாகரத்தா என்று பலரும் யோசித்தார்கள்.

இரண்டாவது திருமணம்: ப்ரியா ராமனை பிரிந்த ரஞ்சித் அடுத்ததாக நடிகை ராகசுதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருடனாவது தொடர்ந்து வாழ்வார் என்று பார்த்தால் அவரையும் விவாகரத்து செய்தார். அதற்கான காரணம் என பல்வேறு யூகங்கள் கடந்த சில வருடங்களாகவே சுற்றிக்கொண்டிருக்கிறது. ராகசுதாவை பிரிந்த அவர் இப்போது மீண்டும் ப்ரியா ராமனோடு வாழ்ந்துவருவதாக கோலிவுட்டில் தகவல்கள் சிறகடிப்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டம்பாளையம்: சூழல் இப்படி இருக்க அவர் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அது நாடக காதலுக்கு எதிரான படம் என்று தான் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் கூறிவந்தார் ரஞ்சித். படத்தின் ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், கட்சி தலைவரையும் தாக்கி காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் ரஞ்சித் அமைதியே காத்துவந்தார். படம் இன்று ரிலீஸாவதாக இருந்தது. அதற்கான டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியது.
செம டல்: ஆனால் படத்தின் டிக்கெட் புக்கிங்கோ படு மோசமாகத்தான் தொடங்கியதிலிருந்து இருந்தது. சொல்லப்போனால் ஒரு ஷோவுக்கு 10 பேர்கூட டிக்கெட்டை முன்பதிவு செய்யவில்லை. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. சூழல் இப்படி இருக்க எல்லோரும் என்னை மிரட்டுகிறார்கள்; கவுண்டம்பாளையம் படம் இன்று ரிலீஸாகாது என்று திடீரென அறிவித்திருக்கிறார் ரஞ்சித். படத்துக்கு எதிர்ப்பு வருவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் கூறி கோவை மாநகர காவல் ஆணையரிடம் ரஞ்சித் புகார் மனு அளித்தார்.
ரஞ்சித் பேட்டி: அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கவுண்டம்பாளையம் பட ரிலீஸ் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தப் படத்துக்காக டிக்கெட் புக் செய்தவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் வெளிவரக்கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கிறார்கள். எனவே இதனை வெளியிட தயாராக இருந்த தியேட்டர் உரிமையாளர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர்.
இதுதான் பாடம்: நாடக காதல் பற்றியும், அதனால் பெற்றோர் அனுபவிக்கும் வலியையும் படமாக எடுத்திருக்கிறேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்புகள் வருகின்றன. ஒரு படம் எடுப்பது எளிது இல்லை. இந்தப் படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்குமே எனது நன்றிகள். நான் அரசியல்வாதி கிடையாது. இந்தப் படத்தின் வெற்றிதான் என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லப்போகும் பதில். சென்சார் சான்றிதழ் வாங்கியும் இந்தப் படத்தை என்னால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. என்னை யார் எதிர்கார்க்கிறார்கள் என்பதையும் சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று படத்தை விரைவில் ரிலீஸ் செய்வேன். இனி ஒவ்வொரு முடிவையும் கடவுள் பார்த்துக்கொள்வார்" என்றார்.
இதற்கிடையே கவுண்டம்பாளையம் படத்தை மிரட்டல் காரணமாகத்தான் ரிலீஸ் செய்யவில்லை என்று ரஞ்சித் கூறினாலும்; அது உண்மையான காரணம் இல்லை புக்கிங்கை வைத்தே பட ரிசல்ட் அவருக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் அவர் ரிலீஸ் செய்ய பயப்படுகிறார் என்று ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











