கௌரி கிஷனுக்கு பெருகிய ஆதரவு.. விபரீதமான நிலைமை.. பதறியடித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர்
சென்னை: 96 பட புகழ் கௌரி கிஷனின் எடை குறித்து யூடியூபர் ஒருவர் கேட்ட கேள்வி பெரும் பஞ்சாயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. திரைத்துறையிலிருந்து பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அந்த யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் சீனியர் நடிகை ராதிகா தனது கருத்தை காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
96 படத்தில் சிறு வயது ஜானுவாக நடித்து புகழடைந்த கௌரி கிஷன் இப்போது அதர்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். நேற்று இப்படம் வெளியானது. இப்படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாகவே நடந்துவருகிறது. அந்தவகையில் கடந்த வாரம் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் யூடியூபர் ஒருவர் கௌரி கிஷனின் எடை பற்றி கேள்வி கேட்டதாக தெரிகிறது. அப்போதைக்கு அந்த விவகாரம் பெரிதாகவில்லை.
கௌரியின் பதிலடி: அதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அந்த சமயத்தில் கௌரியின் எடை பற்றிய கேள்வி மீண்டும் தலை தூக்க தரமான பதிலடியை கொடுத்தார் கௌரி. இதன் காரணமாக அந்த இடமே பரபரப்பானது. அங்கிருந்தவர்களும் அந்த யூடியூபரை கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் திரைத்துறையிலிருந்து கௌரிக்கு ஆதரவு பெருகிவருகிறது.

களமிறங்கிய ராதிகா: பா. இரஞ்சித் உள்ளிட்டோர் காட்டமாக ட்வீட் போட ராதிகாவோ அந்த நபரை அறைந்திருப்பேன் என்று தெரிவித்தார். தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், " கௌரியிடம் கேள்வி கேட்ட நபர் பத்திரிகையாளரா என்றே எனக்கு தெரியாது. நான் இதற்கு முன்பு அவரை பார்த்ததில்லை. இப்போது மைக்கை எடுத்துக்கொண்டு பலர் நாங்களும் ரிப்போர்ட்டர் என்று வந்துவிடுகிறார்கள்.
நானாக இருந்திருந்தால் அடித்திருப்பேன்: கௌரி கிஷன் அமைதியாகவும் தெளிவாகவும் பேசியிருந்தார். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அப்படி பேசியிருப்பேனா என தெரியாது. ஒருவேளை அவரை அடிக்க செய்திருப்பேன். இப்படி பலர் கேள்வி கேட்பதால்தான் நான் பெரிதாக பேட்டிகள் கொடுப்பதில்லை. சோஷியல் மீடியாவில் போஸ்ட்டாக போட்டுவிடுவேன். குஷ்பூ, சரிதா பற்றியும் அவர் பேசியிருக்கிறார். அவர்களிடம் சென்று இப்படி கேள்வி கேட்க முடியுமா? என காட்டமாக தெரிவித்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட யூடியூபர்: பலரும் இப்படி கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். நிலைமை விபரீமாவதை உணர்ந்த யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "கடந்த இரண்டு நாட்களாகவே எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. நான் ஒருவிதத்தில் கேட்டேன். அவர் அதை ஒருவிதத்தில் புரிந்துகொண்டு Stupid என்று சொல்லிவிட்டார். அதனால் அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படி கேள்வி கேட்க வேண்டியதாகிவிட்டது.
உருவ கேலி செய்யவில்லை: நான் அந்தப் பெண்ணை உருவ கேலி செய்யவில்லை. அந்த கேள்வி தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அவரை நோகடிக்க வேண்டுமென்று அப்படி கேட்கவில்லை. அவரது மனம் காயப்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். முன்னதாக கௌரி கிஷன் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'அந்த யூடியூபர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை. அவர் கேட்ட கேள்விதான் காயப்படுத்தியது' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications