அதிர்ச்சி.. துப்பாக்கியை துடைக்கப்போய் குண்டடிப்பட்ட கோவிந்தா.. ஐசியூவில் அனுமதி
மும்பை: 60 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது கைத் துப்பாக்கியை சுத்தம் செய்துக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படத்திலேயே முதலில் கோவிந்தாவை வைத்து தான் படம் இயக்க நினைத்ததாக கூறப்பட்டது. அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கானுக்கும் இருக்கும் அளவுக்கு இந்தியா முழுவதும் நடிகர் கோவிந்தாவுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராமல் செவ்வாய்க்கிழமையான இன்று காலை நடந்த இந்த துப்பாக்கிச்சூடு காரணமாக கோவிந்தாவின் காலில் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிந்தாவின் காலில் இருந்து குண்டை மருத்துவர்கள் அகற்றும் சிகிச்சையை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட் நடிகர் கோவிந்தா: 1963ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பழம்பெரும் நடிகர் அருண் அஹுஜாவுக்கு மகனாக மும்பையில் பிறந்தவர். குடும்பமே சினிமா குடும்பம் என்பதால் கோவிந்தாவுக்கும் பாலிவுட்டில் நடிகராக வேண்டும் என்கிற ஆசை இயல்பாகவே ஏற்பட்டு விட்டது. 1986ம் ஆண்டு வெளியான லவ் 86 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கோவிந்தா. தாதாகிரி, சிந்தூர், ஜெண்டில்மேன், ஆன்கேன், கூலி நம்பர் ஒன், ராக் டான்ஸர், மகாராஜா, ஜோடி நம்பர் ஒன், சாண்ட்விச், பார்ட்னர், ஹாலிடே, கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான ரங்கீலா ராஜா படம் வரை ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர் தான் கோவிந்தா.
துப்பாக்கிச்சூடு: பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள மூத்த நடிகரான கோவிந்தா சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். செவ்வாய்க்கிழமையான இன்று தனது வீட்டில் இருந்த ரிவால்வரை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ட்ரிகரில் கைப்பட்டு கோவிந்தாவின் காலில் குண்டடிப்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஐசியூவில் சிகிச்சை அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆபத்து இல்லை: 60 வயதாகும் பாலிவுட் நடிகர் கோவிந்தா எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய நிலையில், குண்டு அவரது காலில் பாய்ந்ததால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றும் அபாய கட்டம் எல்லாம் இல்லை என்றும் சில நாட்கள் காயம் சரியாகும் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











