கௌதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
சென்னை : தேவராட்டம் படத்திற்கு பிறகு நடிகர் கௌதம் கார்த்திக் இப்பொழுது சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
பத்து தல படத்தில் போலீஸ் அதிகாரியாக முதல் முறையாக நடிக்கும் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான கதைகளில்
தரமான திரைப்படங்களுக்கு இடையிலும் சில சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து வருபவர் நடிகர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டு அதன்பிறகு என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், இவன் தந்திரன், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மஹாதேவகி, தேவராட்டம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனந்தம் விளையாடும் வீடு
இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்த கௌதம் கார்த்திக் தேவராட்டம் படத்தில் பக்கா கிராமத்து பையனாக நடித்து தெறிக்க விட்டிருந்தார். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது எனவும் அதனை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்குகிறார் எனவும் சொல்லப்பட்டது. இதன்படி தற்பொழுது இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி இருக்க அதற்கு ஆனந்தம் விளையாடும் வீடு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சண்டை காட்சிகளுடன்
ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் இணைந்து திருவிழா கோலத்தில் கயிறு இழுக்கும் போட்டி விளையாடுவதாக கலர்ஃபுல்லாக வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட ஆரம்பமே சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டது.

குடும்ப பின்னணியில்
மாயாண்டி குடும்பத்தார் படத்தின் சாயலிலேயே இந்தப் படமும் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியைக் கொண்டு உருவாகிறது. சிறு சிறு சண்டைகள், பாசம், சென்டிமெண்ட், நகைச்சுவை, ஒற்றுமை, காதல் மற்றும் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. கௌதம் கார்த்திக்குடன் இணைந்து சேரன், சரவணன், ஷிவாத்மிகா, விஜய் டிவி ஜாக்லின், சிங்கம்புலி ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் இந்தப் படம் நடிகர் கார்த்தியின் வருஷம் 16 படத்தை போலவே இருக்குமென சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











