Jailer Audio Launch - ரஜினி ரசிகர்களே அலப்பறை கிளப்ப ரெடியா?.. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?
சென்னை: Jailer Audio Launch (ஜெயிலர் இசை வெளியீட்டு விழா) ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். பீஸ்ட் படத்தின் தோல்வியாக நெல்சனும், தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் ரஜினிகாந்த்தும் இந்தப் படத்தின் மூலம் தங்களை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலரில் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

காவாலா: ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் படத்தில் இடம்பெற்ற காவாலா என்ற முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அந்தப் பாடலில் தமன்னா வேற லெவலில் நடனம் ஆடி அட்டகாசமாக ஸ்கோர் செய்துவிட்டார். அதேசமயம் ரஜினிக்கு அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனால் படக்குழு உடனடியாக ஹுக்கும் என்ற அடுத்த சிங்கிளை வெளியிட்டது.
ட்ரெண்டான ஹுக்கும்: ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஹுக்கும் பாடல் அமைந்திருந்தது. குறிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் சமீபத்தில் எழுந்திருந்த சூழலில் பாடலில் இடம்பெற்ற வரிகள் பெரும் கவனத்தை ஈர்த்தன. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மோதலும் எழுந்தது.
ஆடியோ வெளியீட்டு விழா: படத்திலிருந்து இரண்டு சிங்கிள்கள் வெளியானதை அடுத்து படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. குறிப்பாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர். நேற்று ஒரு வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு விரைவில் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கும் என தெரிவித்திருந்தது.
அலப்பறை கெளப்புறோம்: இந்நிலையில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி விழாவானது ஜூலை 28அம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
தலைவர் ஸ்பீச்: ஆடியோ வெளியீட்டு விழாவில் எப்போதுமே ரஜினிகாந்த்தின் பேச்சு அட்டகாசமாக இருக்கும். அதுவும் இரண்டு படங்களின் தோல்வி, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கும் நிலைமையில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு என்னவாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இப்போதே எழ ஆரம்பித்திருக்கிறது. மேலும், நிச்சயம் இந்த முறை ரஜினிகாந்த்தின் பேச்சில் பல உள்குத்துக்கள் இருக்கத்தான் போகிறது. அன்றைய தினம் அலப்பற கெளப்புறோம் என்றும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











