கில்லி கபடியும்.... சென்னை 28 கிரிக்கெட்டும்....
சென்னை: போட்டி, பந்தயம் என்பது சுவாரஸ்யமானது. விளையாட்டு போட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சினிமாக்கள் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் கபடி, ஓட்டப்போட்டி, பைக் ரேஸ், கிரிக்கெட் என பல போட்டிகளை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற படங்களில் போட்டிகளின் சுவாரஸ்யம் கடைசி வரை இருக்கும். அதேசமயம் அந்த விளையாட்டு வீரர்களைத் தவிர யாருக்கும் போட்டிகளைப் பற்றிய விதிமுறைகள் தெரியாது என்பதால் கொஞ்சம் சொதப்பலாக கூட அமைந்தது உண்டு.
தமிழ் சினிமாவில் விளையாட்டுப் போட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

கில்லி - கபடி
விஜய் நடித்த கில்லி கபடிப் போட்டியை மையமாகக் கொண்டது. கடைசியில் கிளைமேக்ஸ் வரைக்கும் கபடிதான். அணியின் பெயரும் கில்லி என்பதால் படத்திற்கு அதேயே வைத்துவிட்டார்கள்.

வெண்ணிலா கபடிக்குழு – கபடி
விஷ்ணு அறிமுகமான படம் வெண்ணிலா கபடிக்குழு. கபடியைப் பற்றி கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாத படம் இது. எளிமையான முறையில் கபடி விளையாட்டினை சொன்ன படம் இது.

சென்னை 600028 – கிரிக்கெட்
எத்தனையோ விளையாட்டுக்கள் இருந்தாலும் கிரிக்கெட் பற்றிதான் இளசுகள் முதல் முதியவர்கள் வரை பேசுகின்றனர். சென்னை பகுதிவாசிகளிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சென்னை 600028. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் பட்டாபட்டி படமும் கிராமத்து கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி எடுக்கப்பட்டதுதான்.

குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி – குத்துச்சண்டை
ஜெயம் ரவி - அசின் நடித்த படம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இது குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். கிளைமேக்ஸ் வரைக்கும் குத்துச் சண்டைதான். இதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

ஆட்டோ ரேஸ் – ஓரம்போ
சென்னையில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் பிரபலமானது. இதுபோன்று ஆட்டோ ரேஸ் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆர்யா நடித்த ஓரம்போ.

ஃபுட்பால் - தாஸ்
ஃபுட்பால் விளையாட்டு வீரராக ஜெயம் ரவி நடித்த படம் தாஸ். இது கல்லூரி அணிகளுக்கு இடையேயான மோதல். ஆனால் கடைசிவரைக்கும் ஃபுட்பால் பற்றி மட்டுமே சொல்லாமல் விட்டதுதான் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

ஆடுகளம் – சேவல்சண்டை
சேவல் வளர்ப்பது சண்டைக்காக அது கவுரவம் சார்ந்த விசயம் என்பதை உணர்த்திய படம் ஆடுகளம். தனுஷ் வெற்றிப் பாக்கெட்டில் உச்சமாய் அமைந்த படம் இது. தேசிய விருது பெற்றுத் தந்த படம் இந்த சேவல் சண்டை ஆடுகளம்.

எதிர்நீச்சல் – மராத்தான்
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சிவகார்த்திக்கேயன் நடித்த எதிர்நீச்சல். மராத்தான் ஓட்டப் போட்டியை மையமாக வைத்த திரைப்படம் இது. இதேபோல் ஆட்டிசம் பாதித்த சிறுவனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹரிதாஸ் படத்திலும் மராத்தான் போட்டி மையப்படுத்தப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications











