திரையுலகில் அடுத்த அதிர்ச்சி.. இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்
சென்னை: இசையமைப்பாளரும், பிரபல கிடாரிஸ்ட்டுமான ஸ்டீவ் வாட்ஸ் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராதாமோகன் இயக்கிய உப்புக்கருவாடு படத்திற்கு இசையமைத்தவர் ஸ்டீவ் வாட்ஸ். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி பிற இசையமைப்பாளர்களிடம் கிடாரிஸ்ட்டாகவும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஸ்டீவ் வாட்ஸ் - முழு விவரம்
ஸ்டீவ் வாட்ஸ் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவர் இசை மீது இருக்கும் ஆர்வத்தால் கிடார் வாசிப்பதற்கு கற்றுக்கொண்டார். இதனையடுத்து ஆல்பம் பாடல்களுக்கும், தனி பாடலுக்கும் கிடார் வாசித்து அனைவராலும் கவனிக்கப்படுபவராக மாறினார். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் சில ஆல்பங்களுக்கு கிடார் வாசித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்களுடன் ஸ்டீவ் வாட்ஸின் பயணம்
ஆல்பங்களுக்கு கிடார் வாசித்துக்கொண்டிருந்த ஸ்டீவ் வாட்ஸ் தமிழ் திரை இசையமைப்பாளர்களுடன் பயணம் செய்ய ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத், இளையராஜா, கார்த்திக் ராஜா, ஜிவி பிரகாஷ், இமான், ரமேஷ் விநாயகம், சத்யா, ஜிப்ரான் உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்களுக்கு கிடார் வாசித்திருக்கிறார்.

ஸ்டீவ்வை இண்ட்ரோ செய்த ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் இசையமைப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் பீமா. இந்தப் படத்தின் மூலம்தான் திரையுலகில் கிடாரிஸ்ட்டாக அறிமுகமானார் ஸ்டீவ் வாட்ஸ். அதன் பிறகு இளையராஜா இசையில் நீதானே என் பொன் வசந்தம், தரண்குமார் இசையில் போடா போடி, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மரியான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துப்பாக்கி, என்னை அறிந்தால், இளையராஜா இசையில் உன் சமையல் அறையில் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு கிடாரிஸ்ட்டாக பணிபுரிந்துள்ளார்.

கிடாரில் மாமழை பொழிந்த ஸ்டீவ் வாட்ஸ்
வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடல் க்ளாசிக் ரகம். அந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் கிடார் இசையை இசைத்து புகழ் பெற்றவர் ஸ்டீவ் வாட்ஸ். அதேபோல் அதேபடத்தில் இடம்பெற்றிருக்கும் அடியே கொல்லுதே பாடலின் ஆரம்ப இசை இன்றுவரை ரசிகர்களை வைப் செய்யக்கூடியது. அதனை இசைத்தவரும் ஸ்டீவ் வாட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவ் வாட்ஸ் கிடாரிஸ்ட்டாக மட்டுமின்றி அபியும் நானும், மொழி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவான உப்புக்கருவாடு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

உயிரிழந்த ஸ்டீவ் வாட்ஸ்
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் வாட்ஸ் திடீரென உயிரிழந்திருக்கிறார். அவரது உயிரழப்புக்கு காரணம் எதுவும் தெரியவில்லை. கிடார் வாசிப்பில் ஆர்வம் காட்டிய பலருக்கு பயிற்சி வழங்கிவந்தார் 43 வயதே ஆன ஸ்டீவ் வாட்ஸ். இவரது மரணத்துக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications