சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கி சூடு.. பைக்கில் வந்த மர்ம நபர்.. பதறிய பாலிவுட்!
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு வேகமாக வெளியேறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து வருபவர் சல்மான் கான். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் பிக் பாஸை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதைப் போன்று, இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். 58 வயதாகும் சல்மான் கான்1988ம் ஆண்டு மைனே பியார் கியா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட்டில் கலக்கி வருகிறார்.

Hum Dil De Chuke Sanam திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். ஆனால், ஐஸ்வர்யா தந்தைக்கும் சல்மான் கானுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர். அதே போல கத்ரீனா கைஃப், சோனாக்ஷி சின்ஹா என பல நடிகைகளுடன் சல்மான் கிசுகிசுவில் சிக்கினாலும், தற்போது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே உள்ளார்.
டைகர் 3: சல்மான் கானின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டைகர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப்படம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டியது. மணீஷ் ஷர்மா இயக்கி இருந்தார். டைகர் 3, ஸ்பை த்ரில்லர் ஜானரில் ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகி உள்ள இப்படத்தில், சல்மான் கானுடன் கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி நடித்திருந்தனர். முக்கியமாக ஷாருக்கானும் ஹிருத்திக் ரோஷனும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். ஷாருக்கானின் பதான் படத்தில் சல்மான் கான் கேமியோவாக நடித்திருந்தார். அதேபோல் இப்போது ஷாருக்கானும் சல்மான் கானுக்காக நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சல்மான் கானின் மும்பை இல்லத்திற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில், பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோட்டார் பைக்கில் வேகமாக ஓட்டி வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு வேகமாக ஓடினார். இந்த சம்பவம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











