Guntur Kaaram: உள்ள கொஞ்சம் மடக்கித்தட்டா?.. என்னடா இது மகேஷ் பாபு படத்துக்கு வந்த சோதனை!
சென்னை: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் தியேட்டர்களில் வெறும் தெலுங்கில் மட்டும் வெளியான நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அனைத்து மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என அவசர அவசரமாக டப்பிங் செய்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அந்த படத்தில் ஒரே உருப்படியான விஷயமாக இருந்த அந்த 'Kurchi Madathapetti' பாடலுக்கு இங்கே உள்ள குட்டீஸே மொழி புரியாமல் ஆட்டம் போட்டு வரும் நிலையில், தமிழில் பாடலை டப்பிங் பண்றேன் என சொதப்பி விட்டனர்.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாக்ஷி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஜெயராம், வெண்ணிலா கிஷோர், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் குண்டூர் காரம் கடந்த மாதம் ஜனவரி மகர சங்கராந்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

ஹாட்ரிக் தோல்வி: மகேஷ் பாபுவின் 25வது படமான மகரிஷி படம் தான் கடைசியாக அவருக்கு ஹிட் கொடுத்தது. அதன் பின்னர், ராஷ்மிகா மந்தனாவுடன் அவர் இணைந்து நடித்த சரிலேரு நீக்கெவ்வரு, கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்த சர்காரு வாரி பட்டா படங்களை தொடர்ந்து தற்போது ஸ்ரீ லீலாவுடன் அவர் நடித்துள்ள குண்டூர் காரம் படமும் படுதோல்வியை சந்தித்து ஹாட்ரிக் ஃபிளாப் கொடுத்துள்ளது.
ராஜமெளலி படம் பந்தயம் அடிக்கும்: ஆனால், இந்த 3 படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கும் மேல் அதிக வசூலை ஈட்டியுள்ளன. ஆனால், இதையெல்லாம் ராஜமெளலி இயக்கத்தில் அடுத்து மகேஷ் பாபு நடிக்கவுள்ள படம் முறியடித்து 1000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் என்கிற நம்பிக்கையில் மகேஷ் பாபு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
குண்டூர் காரம் பாடல்: தமன் இசையில் குண்டூர் காரம் படத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் என்றால் அது "குறிச்சி மடத்தாபெட்டி" என்கிற பாடல் தான். அந்த பாடலில் மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீலீலா போட்டுள்ள நடனத்தை ஆல் ஏரியாவிலும் ரசிகர்கள் தெலுங்கிலேயே ரசித்து கொண்டாடி வருகின்றனர்.
உள்ள கொஞ்சம் மடக்கித்தட்டு: இந்நிலையில், குண்டூர் காரம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. அந்த படத்தில் இடம்பெற்ற அந்த பாடலையும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வம்படியாக டப்பிங் செய்துள்ளனர். அந்த பாடலின் முக்கியமான வரியை "உள்ள கொஞ்சம் மடக்கித்தட்டு" என மகேஷ் பாபு பாடுவது போல அமைத்திருப்பது ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.
அவளுக்கு மட்டும் பொன்னி அரிசியா?: மகேஷ் பாபு வரிகளே சூப்பர் என சொல்லும் அளவுக்கு ஸ்ரீலீலா நடனம் ஆடும் போது வரும் பாடல் வரிகள் வாந்தி எடுப்பது போல உள்ளதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். "அவளுக்கு மட்டும் பொன்னி அரிசியா?.. எனக்கு மட்டும் மட்டமான சன்ன அரிசியா" என அந்த பாடலை மெட்டுக்கு ஏற்றவாறு உருவாக்காமல், அப்படியே டப்பிங் செய்து மொத்த பாடலையும் மறுபடியும் தமிழில் பார்க்க முடியாத படியும் குறிப்பாக கேட்க முடியாதபடியும் செய்து விட்டதாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











