கொரோனா லாக்டவுனில் ஷூட்டிங்.. சண்டைக் காட்சியின்போது திடீர் விபத்து.. பிரபல நடிகர் பலத்த காயம்!
மும்பை: லாக்டவுனில் நடந்த படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் காயமடைந்தார்.
ஜெயா டிவியில் வெளியான தொடர் மாயாவி. இதில் கணேஷ் வெங்கட்ராமுடன் இணைந்து நடித்திருந்தவர் இந்தி நடிகர் குர்மீத் சவுத்ரி.
கடந்த 2008 ஆம் ஆண்டு ராமாயண கதையை மீண்டும் டிவி சீரியலாகத் தயாரித்தபோது, ராமராக நடித்தவரும் இவர்தான்.

தற்காப்பு கலை
இந்தியில் பல்வேறு தொடர்களில் நடித்துள்ள இவர், தற்காப்பு கலை வீரரும் கூட. இந்தியில் காமோஷியான் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மகேஷ் பட் தயாரித்த இந்தப் படத்தை கரண் தரா இயக்கி இருந்தார். அலி பாசல், சப்னா உள்பட பலர் இதில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்த குர்மீத் சவுத்ரி, டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

கொரோனா காரணமாக
இப்போது இவர் 'த ஒய்ஃப்' என்ற ஹாரார் படத்தில் நடித்து வருகிறார். இதில் சயானி தத்தா உள்பட பலர் நடிக்கின்றனர். கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் தடைப்பட்டிருந்ததால், இதன் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தகுந்த பாதுகாப்புகளுடன் சில படங்களின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது.

முதுகில் காயம்
அதன்படி, நிறுத்தப்பட்டிருந்த த ஒய்ப் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்துக்காகச் சண்டைக் காட்சி படப்பிடிப்பு, ஜெய்ப்பூரில் நடந்து வந்தது. இதில், நடிகர் குர்மீத் சவுத்ரி மற்றும் சண்டைக் கலைஞர்கள் பங்கேற்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், நடிகர் குர்மீத் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

எதிர்பாராத விதமாக
'ரிஸ்கான சண்டைக்காட்சிதான். தகுந்த பாதுகாப்புடன் கயிறுக் கட்டப்பட்டு சண்டைக் காட்சியில் பங்கேற்றார் குர்மீத். இருந்தும் அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலி எடுப்பதாகச் சொன்னதால் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது' என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications