Parasakthi: கலைஞரின் அந்த மேனரிஷத்துக்காக ரொம்பவும் மெனக்கெட்ட குரு சோமசுந்தரம்.. படத்தில் அதை கவனித்தீர்களா?
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு உள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, காளி வெங்கட், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கதாபாத்திரத்தில் நடித்தவர் குரு சோமசுந்தரம். அவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தது தொடர்பாக பேசி உள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று சுதா கொங்கரா கேட்டுக் கொண்டார். ஆனால் என்ன கதாபாத்திரம் என்பது குறித்து முதலில் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. எனக்கான மேக்-அப் போடும் போது தான் தெரிந்தது, ஒரு பெரிய ஆளுமையின் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்ற ஆச்சரியமும் மகிழ்ச்சியும் இருந்தது. திராவிட இயக்கத்தில் மிகப்பெரிய தலைவர் அவர், தமிழுக்குத் தலைவர் என்று சொல்லலாம். அவரது தோற்றத்தில் நான் வரப் போகிறேன் என்றதும் எனக்கு கொஞ்சம் பயமும் அதே நேரத்தில் மகிழ்ச்சியும் வந்தது.

மெனக்கெடல்: மேக்-அப் டெஸ்ட் நடந்த போது எனது நடிப்பு வாழ்க்கையில் இது முக்கியமான மைல்கல் என்று தோன்றியது. அவரது பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் பார்த்து தயார் படுத்திக் கொண்டேன். சிறுவயதில் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்த போது பார்த்திருக்கிறேன். அத்துடன் சுதா கொங்கரா சில தகவல்கள் எனக்கு கூறினார். முக்கியமாக விக் தயாரித்தவரைப் பாராட்ட வேண்டும். மேலும் கலைஞர் தனது கீழ் பற்கள் தெரியாமல் சிரிப்பார். அதை கவனித்து அதுபோல நடித்தேன். அது குறித்து சுதா கொங்கரா என்னிடம் கேட்டார்.
நம்பிக்கை: கலைஞராக நான் நடித்த காட்சிகளை மானிட்டரில் பார்த்தபோதே திரையில் அது நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. வீரம் நிறைந்த ஒரு பெரிய தலைவரின் வார்த்தைகள் என்பதை மனதில் வைத்து தான் நான் ஒவ்வொரு டயலாக்கையும் பேசினேன். படம் பார்த்த பலரும் என்னை தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மொழி என்பது மிகவும் முக்கியம்.
தாய் மொழி: மொழிகளுக்கு எல்லாம் தாய் தமிழ். நாம் நமது தாய் மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால் தாய் கொடியை அறுத்து விட்டது போல ஆகிவிடும். நமது முன்னோர்களின் கற்பனையைத் தொட வேண்டும் என்றால் மொழி ரொம்பவும் முக்கியம். ஒரு நடிகராக ஒரு டயலாக்கைச் சொல்லும் போதே அந்த மொழியின் தன்மையும் வீரியமும் எனக்குத் தெரியும். அப்படி இருக்கையில் மொழி குறிப்பாக தாய் மொழி அனைவருக்கும் மிகவும் முக்கியம்" என்று பேசி உள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











