SK 21 Update - சிவகார்த்திகேயனின் புதிய படம்.. அப்டேட்டை வெளியிட்ட படக்குழு - இசையமைப்பாளர் யார் தெரியுமா?
சென்னை: Sivakarthikeyan Movie Update (சிவகார்த்திகேயன் பட அப்டேட்) ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தொகுப்பாளராக மாறி பின்னர் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இப்போது இருக்கிறார். அவருக்கென்று சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

சிவாவின் அசுர வளர்ச்சி: கதை தேர்வில் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட அவர் அந்தப் பாதையில் சிறப்பாகவே பயணித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என பலரால் கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சி அப்படி கணித்தவர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்திருக்கிறது.
பிரின்ஸ் கொடுத்த அடி: இப்படிப்பட்ட சூழலில்தான் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். இரண்டு படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது. பிரின்ஸ் பட தோல்வி சிவகார்த்திகேயனின் கரியரில் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.
மாவீரனில் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் படம் கொடுத்த அடியால் தனது அடுத்த அடியை நிதானமாகவும், கவனமாகவும் எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். ஆகஸ்ட் 11ஆம் தேதி மாவீரன் படம் ரிலீஸாகிறது.
கமல் தயாரிப்பில் சிவா: மாவீரன் படத்தை முடித்ததைத் தொடர்ந்து கமல் ஹாசன் தயாரிப்பில் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ரங்கூன் படத்தின் மூலம் ராஜ்குமார் பெரியசாமி கவனம் ஈர்த்தவர் என்பதால் சிவகார்த்திகேயனை எந்த கதைக்களத்தில் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பலமாக எழுந்திருக்கிறது.

ஓய்வு கொடுத்த சிவா: படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கும் சூழலில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன் என சிவகார்த்திகேயன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் டெக்னீசியன்கள் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
அப்டேட் கொடுத்த படக்குழு: இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்துக்கு யார் இசையமைக்கப்போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார். முதல்முறையாக சிவாவின் படத்துக்கு ஜிவி இசையமைப்பதால் பாடல்களும், பிஜிஎம்மும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் எஸ்.கே ரசிகர்கள் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











