டாடியானார்.. ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி தம்பதிக்கு அழகானப் பெண் குழந்தை..குவியும் வாழ்த்துகள்!
சென்னை: இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் அப்பா ஆனார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், ஜிவி.பிரகாஷ்குமார். வசந்தபாலன் இயக்கிய வெயில் மூலம் இசை அமைப்பாளர் ஆனார்.
அஜீத்தின் கிரீடம், தனுஷின் பொல்லாதவன், கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன், ஆர்யாவின் மதராசப்பட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

அசுரன் இசை
பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள, ஜி.வி.பிரகாஷ், சமீபத்தில் ஹிட்டான அசுரன் படத்துக்கும் இசை அமைத்திருந்தார். இதன் பாடல்கள் மெகா ஹிட்டாயின. பின்னர், சாம் ஆண்டன் இயக்கிய டார்லிங் படம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பென்சில், திரிஷா இல்லைனா நயன்தாரா, நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

சூரரைப் போற்று
இப்போது, ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்கா யாருமில்லை, 4 ஜி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. சூர்யாவின் சூரரைப் போற்று, கங்கனா நடிக்கும் தலைவி படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் உட்பட சில படங்களுக்கு இசை அமைக்க உள்ளார்.

பாடகி சைந்தவி
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனாவின் மகனான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது பள்ளித் தோழியும் பாடகியுமான சைந்தவியை காதலித்து வந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சைந்தவி. கடந்த 2013 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், நடிகை சைந்தவி கர்ப்பமாக இருந்தார்.

பெண் குழந்தை
அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகானப் பெண் குழந்தை பிறந்தது. மனைவியும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமாருக்குத் திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











