மூளையில் கட்டி.. துடிக்கும் ஒரு வயது சிறுவன்.. உதவிக்கரம் நீட்டிய ஜி.வி. பிரகாஷ் குமார்!
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி . பிரகாஷ் குமார் ஒரு வயது சிறுவனின் மருத்துவ செலவுக்கு தன்னால் முயன்ற உதவியை செய்துள்ளது பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
சினிமாவில் நடிகர்கள் கோடி கோடியாக சம்பாதித்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் சிலர் மட்டுமே உதவ முன் வருகின்றனர். அதில், குறிப்பாக ஜிவி பிரகாஷ் குமார் தொடர்ந்து தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகனான ஜி.வி. பிரகாஷ் குமார் சிறுவயதிலிருந்து இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக இசையைக் கற்று இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில், டார்லிங் படத்தில் இருந்து ஹீரோவாகவும் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
சமூக அக்கறை அதிகம்: சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக அக்கறை மீது அதிக அக்கறையை ஒரு சக மனிதனாக எப்போதுமே ஜி.வி. பிரகாஷ் வெளிப்படுத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் என அனைத்துக்குமே குரல் கொடுத்து வரும் ஜி.வி. பிரகாஷ் உதவி என கேட்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
மூளையில் கட்டி: ஒரு வயதே ஆன சிறுவன் ஒருவனுக்கு சிறு மூளை அருகே கட்டி இருப்பதாகவும் அதற்காக உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதை பார்த்து துடித்துப் போன ஜி.வி. பிரகாஷ் தன்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என உதவியுள்ளார்.
75 ஆயிரம் பண உதவி: உடனடியாக தனது கூகுள் பே மூலமாக 75 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தையின் சிகிச்சைக்கு ஜி.வி. பிரகாஷ் உதவிய நிலையில், அவரது ரசிகர்களும் உதவி வருகின்றனர். சீக்கிரமே சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கேப்டன் மில்லர்: தனுஷ் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டு இருந்தார். மேலும், சூர்யா மற்றும் சுதா கொங்கராவின் புறநானூறு படத்துக்கும் பக்காவான இசையை அமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











