பேரவலம்.. தடுமாறிய தமிழக அரசு.. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கொதித்தெழுந்த ஜி.வி. பிரகாஷ்!
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தற்போது ட்வீட் போட்டுள்ளார். மேலும், தமிழக அரசை கண்டித்து தைரியமாக ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் விரைந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளச்சாராய உற்பத்தி அடியோடு அழிக்கப்படும் என்றெல்லாம் உறுதியளித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் குரல் கொடுத்த விஜய்: "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் குரல் எழுப்பினார். அவரை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் கண்டனம்: இந்நிலையில், எப்போதுமே சமூக அக்கறை கொண்டு ட்வீட்களை போட்டு வரும் ஜி.வி. பிரகாஷ் எங்கே காணோம் என ரசிகர்கள் கிண்டல் செய்து வந்த நிலையில், தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். "காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது .
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை." என அவர் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவை விடாத ப்ளூ சட்டை மாறன்: சூர்யா ஸ்வீட்ஸ் என இன்னொரு மீம் போட்டோவை போட்டு, நடிகர் சூர்யா இன்னும் மிக்சர் சாப்பிடுகிறாரா? என தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் நடிகர் சூர்யா இந்த விவகாரத்தில் கருத்து சொல்லாமல் மெளனம் காப்பது ஏன் என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார். கங்குவா மற்றும் சர்ஃபிரா படங்களின் ரிலீஸ் வேலை ஒரு பக்கம் அந்தமானில் சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் என படுபிசியாக சூர்யா இருந்து வருவதால் இதுதொடர்பாக எந்தவொரு கருத்தையும் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











