திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்.. ஜி.வி. பிரகாஷ் குரலில் வெளியானது திருவாசகம்!
சென்னை: தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் சிகரமாய் விளங்கும் திருவாசகம், தற்போது இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய இசை வடிவத்தில் மறுவடிவம் பெற்றுள்ளது. சிவனின் மகிமையை போற்றும் வகையில், அவரது குரலிலும் இசையிலும் உருவான திருவாசகத்தின் முதல் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இந்தப் பாடலின் ஒரு பகுதியை மேடையில் வழங்கினார். அப்போது அந்த இடம் முழுவதும் தெய்வீக அமைதி சூழ்ந்தது. இது, திருவாசக இசை முயற்சியின் ஆன்மிக ஆழத்தையும், அதன் வலிமையையும் ஒரே நிகழ்வில் வெளிப்படுத்தியதாகப் பேசப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷின் யூடியூப் (YouTube) சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த முதல் பாடல், சிவனின் பல்வேறு நிலைகளை - ஆதியும் அந்தமுமில்லாத கருணை வடிவம், ருத்ர ரூபம், யோகி வடிவம் எனப் பல பரிமாணங்களை - இசை வழியாகக் காட்சிப்படுத்துகிறது. இந்த வரிகளில் ஒலிக்கும் சிவபக்தி, ஜி.வி. பிரகாஷின் குரலால் இன்னும் ஆழமாக மனதைச் சென்றடைகிறது. அவரது குரலில் வெளிப்படும் வலிமை, பக்தி மற்றும் பணிவு ஆகியவை திருவாசகத்தின் தத்துவத்தை ஓர் உன்னதமான இசை அனுபவமாக மாற்றியுள்ளன.
திரைப்பட இசை உலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ள ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைக்கும் இசையைத் தேடும் கலைஞராக அறியப்படுகிறார். அந்த தேடலின் ஒரு முக்கிய கட்டமாகவே இந்தத் திருவாசக இசை முயற்சி பார்க்கப்படுகிறது. பழமையான ஆன்மிக இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு எளிமையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன், அவர் தனது இசை வடிவமைப்பில் நவீன ஒலி அமைப்புடன் பாரம்பரிய பக்தியையும் நுட்பமாக இணைத்துள்ளார்.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக வெளியிடுவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவாகும். அதன் முதல் படியாக வந்துள்ள இந்தப் பாடல், அவரது கனவுச் பயணம் சரியான பாதையில் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சிவனின் பல்வேறு வடிவங்களையும், மனித மனதின் ஏக்கங்களையும், நம்மை இறைவனிடம் சரணடையச் செய்யும் ஒரு தெய்வீக அனுபவமாக மாற்றியுள்ள இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசையுலகில் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











