எனக்கும் அவ்வளவு மன அழுத்தம்.. விவாகரத்து பற்றி மனம் திறந்த ஜிவி பிரகாஷ்
சென்னை: ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கடைசியாக அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வந்தன. அதில் இடம்பெற்ற இசை பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிக்க சென்றதால் அதிக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்துவந்த ஜிவி பிரகாஷ் இப்போது மீண்டும் இசையமைப்பில் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இடையில் நடிக்க சென்ற அவர் இசையமைப்பதை குறைத்துக்கொண்டார். ஆனால் அவர் தொடர்ந்து இசையமைக்க வேண்டுமென்பதுதான் அவரது ரசிகர்களின் வலுவான கோரிக்கையாக இருந்தது. சூழல் இப்படி இருக்க தொடர்ந்து அவர் மீண்டும் இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் அவரது இசையமைப்பில் அண்மையில் வெளியாகின. அடுத்ததாக குட் பேட் அக்லி, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கும் இசையமைக்க கமிட்டாகியிருக்கிறார்.

விவாகரத்து: இதற்கிடையே ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அதனை சைந்தவியும் உறுதிப்படுத்தினார். இவர்கள் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இசை கச்சேரிகளில் ஒன்றாகவே பயணப்படுகின்றனர். சமீபத்தில்கூட நடந்த ஒரு கான்செர்ட்டில் சைந்தவி பிறை தேடும் இரவிலே பாடலை பாடினார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது.
ஜிவி பிரகாஷ் பேட்டி: இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டி ஒன்றில், “நான் அனைத்து சூழல்களிலும் வேலை செய்துகொண்டுதான் இருப்பேன். தனிப்பட்ட வாழ்க்கையும், நாம் செய்யும் வேலையும் வேறு வேறு என்று புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் தெளிவு இருந்தால்தான் சினிமா துறைக்குள் வரவேண்டும். அதையும் மீறி தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு தொல்லை கொடுத்தால் வேலையை ஒழுங்காக செய்ய முடியாது.
கீழே விழுவோம்: ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது பணியினை பாதித்தால் அவர் அந்த வேலையிலிருந்து கீழே விழுந்துவிடுவார். மீண்டும் அந்த வேலையில் பழைய இடத்தை பிடிப்பது ரொம்பவே கஷ்டம். வாழ்வில் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று நினைத்தால் வேலையையும், தனிப்பட்ட வாழ்வையும் தனித்தனியாக பிரித்து பார்க்க பழக வேண்டும். வேலை என்று வந்துவிட்டால் அனைத்தையும் ஓரமாக வைத்துவிட வேண்டும்.
அமரன், லக்கி பாஸ்கர்: அப்படி நான் இருந்ததால்தான் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது. அமரன், லக்கி பாஸ்கர் படங்களுக்கு நல்ல இசையை கொடுக்க முடிந்தது. இது எல்லாமே ஒருவித மனநிலைதான். அனைத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். வேலை என்று வந்துவிட்டால் நாம் 100 சதவீத உழைப்பை கொடுத்தே ஆக வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த வேலைக்கு நாம் தகுதி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறோம். எனக்கும் தனிப்பட்ட ரீதியில் மன அழுத்தம் இருக்கிறதுதான்” என்றார்.


Click it and Unblock the Notifications











