க/பெ. ரணசிங்கம் படத்தில் அறிமுகம்.. பிரபல இசையமைப்பாளர் தங்கைக்கு குவிகிறது வாழ்த்து!
சென்னை: க/பெ. ரணசிங்கம் படத்தில் பிரபல இசையமப்பாளர் தங்கையும் நடித்துள்ளார்.
விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ. ரணசிங்கம் படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது.
நேற்று மாலை இந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி. பிரகாஷின் தங்கை
இந்த டீசரில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் இருந்து இன்னொரு கலை வாரிசு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ரொம்ப சந்தோஷம்
கடந்த ஜூன் மாதம் க/பெ. ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பது குறித்து டிவீட் போட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முக்கியமான கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடிப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். அதற்கு ரொம்ப சந்தோஷம் என எமோஜி போட்டு பதிலளித்துள்ளார் பவானிஸ்ரீ.

நெட்பிளிக்ஸ்
நடிப்பில் ஆர்வம் கொண்ட பவானிஸ்ரீ, அமலா அக்கினேனி, சுனைனா நடிப்பில் வெளியான High Priestess எனும் வெப்சீரிஸில் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் சுதா இயக்கத்தில் உருவாகவுள்ள நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸ் ஒன்றில் மீசையை முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்த நடிகர் ஆனந்துக்கு ஜோடியாக நடிக்கவும் பவானிஸ்ரீ கமீட் ஆகியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் வாழ்த்து
க/பெ. ரணசிங்கம் படத்தின் டீசரை ஷேர் செய்த ஜி.வி. பிரகாஷ், படக்குழுவுக்கும் சினிமாவில் அறிமுகமாகும் தனது தங்கைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், ஜி.வி. பிரகாஷின் மனைவி சைந்தவியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து பவானிஸ்ரீக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தெறிக்கும் வசனங்கள்
சாதி மத அரசியல் தாண்டி இங்க தண்ணியையும் காத்தையும் வச்சு மொத்த உலக அரசியலும் நடக்குது என விஜய்சேதுபதி பேசும் வசனமாகட்டும், போலீஸ்காரர்கள் அடிக்க துரத்தி வரும் போது, தப்பித்து ஓடும் அப்பாவி பெண்ணாக ஓடி வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பாகட்டும் டீசரின் ஒவ்வொரு காட்சிகளிலும் பல வலிகளை கடத்தி இருக்கிறார் இயக்குநர் பெ. விருமாண்டி.


Click it and Unblock the Notifications











