ஹாலிவுட் படத்தில் ஜி.வி பிரகாஷ்... நடிகர் பிராண்டன் டி ஜாக்சனுடன் இணைகிற இவருக்கு என்ன கேரக்டர்?
சென்னை: நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார், ஹாலிவுட்டில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.
இசை அமைப்பாளராக ஹிட்டடித்த ஜி.வி.பிரகாஷ் குமார், பிறகு ஹீரோ ஆனார். இப்போதும் பல படங்களில் நடிகராகவும் இசை அமைப்பாளராகவும் பிசியாக இருக்கிறார்.
இவர், ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியா மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

பிராண்டன் டி ஜாக்சன்
படத்துக்கு டிராப் சிட்டி என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில், முக்கிய வேடத்தில் நெப்போலியன் நடிக்கிறார். அவருடன் ஜி.வி பிரகாஷும் இப்போது இணைந்துள்ளார். இவர்களுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி ஜாக்சன் நடிக்கிறார். இவர், டிராபிக் தண்டர், பர்சி ஜாக்சன், பிக் மாமா ஹவுஸ் போன்ற ஆங்கில படங்களில் நடித்துள்ளார்.

ரிக்கி பர்செல்
இவர் தவிர, டெட் பிரஸிடெண்ட்ஸ், நோர்பிட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த கிலிஃப்டன், எரிகா பின்கெட் ஆகியோரும் நடித்துள்ளனர். ரிக்கி பர்செல் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள நேஷவில் என்னும் இடத்தில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

பிரபலமாகும் பாடல்
வறுமையில் வாடும் ராப் பாடகனின் கதை இது. இந்த பாடகன், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பல் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான். பிறகு அவன் எழுதிய பாடல் ஒன்று உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால், துரதரிஷ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது கைது செய்யப்படுகிறான்.

அறுவை சிகிச்சை
அவனை கொல்லவும் முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்தப் பாடகன் என்ன முடிவெடுக்கிறான் என்பது கதை. இதில் ஜிவி.பிரகாஷ்குமார் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தை கோடையில் வெளியிடும் முயற்சியில் உள்ளனர். இதில் இரண்டு பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறாராம்.

கைபா பிலிம்ஸ்
படத்தை தயாரித்துள்ள கைபா பிலிம்ஸ் நிறுவனம், அமெரிக்கத் தமிழரான டெல் கே கணேசன் மற்றும் அவரது நண்பர் ஜி பி திமோதியோஸால், அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் தொடங்கப்பட்டதாகும். இந்த நிறுவனம் சினிமா மற்றும் ஆவணப் படங்களை தயாரித்து வருகிறது. லியாம் நீசன் நடித்து வெளிவர இருக்கும் தி மினிட்மேன் படத்தை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications











