Rohini Theatre: கலைகள் எல்லோருக்கும் சொந்தமானது - ரோகிணி தியேட்டர் சம்பவம் குறித்து ஜிவி பிரகாஷ் கண்டனம்
சென்னை: Pathu Thala FDFS - பத்து தல படம் பார்க்க நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை உள்ளே விடாத ரோகிணி திரையரங்கத்துக்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கிருஷ்ணா. இவர் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் சிம்புவை வைத்து இயக்கி ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பத்து தல திரைப்படம்
கன்னடத்தில் வெளியாகி மெகா ஹிட்டான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக பத்து தல உருவாகியுள்ளது. இதில் ஏஜிஆர் ராவணன் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார். அவருடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்ராயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படமானது உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பத்து தல முதல் நாள் முதல் காட்சி
பத்து தல படத்துக்கான அதிகாலை 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதை அடுத்து காலை 8 மணிக்குத்தான் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. எனவே காலை 7 மணியிலிருந்தே தமிழ்நாட்டில் பத்து தல படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு முன் ரசிகர்கள் கூடினர். மேலும் சிம்புவுக்காக பல கட் அவுட்டுகளை வைத்தும், சிம்புவை வாழ்த்தியும் முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

ரோகிணி தியேட்டரின் அராஜகம்
இப்படிப்பட்ட சூழலில் சென்னை ரோகிணி திரையரங்கத்திலும் பத்து தல சென்னை ரோகிணி திரையரங்கத்திலும் வெளியாகியிருக்கிறது. இன்று காலை 8 மணி காட்சிக்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் ரோகிணி தியேட்டருக்கு வந்தனர். படத்துக்கான டிக்கெட்டும் அவர்களிடம் இருந்தது. ஆனால் அவர்களை தியேட்டர் ஊழியர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.

ரோகிணி தியேட்டரின் விளக்கம்
தியேட்டர் ஊழியர்களின் இந்த அராஜக செயல் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது. மேலும், படம் பார்க்க வருபவரின் உடை, தோற்றத்தை வைத்துதான் உள்ளே அனுமதிப்பதா வேண்டாமா என ரோகிணி தியேட்டர் முடிவு செய்யுமா. அவர்களுக்கு தேவை டிக்கெட்டுக்கான பணம். அதை வாங்கிக்கொண்டு உள்ளே விட வேண்டியதுதானே என சமூக வலைதளங்களிலும் பலர் கடுமையாம விமர்சித்தனர். இதனையடுத்து தியேட்டரின் உரிமையாளர் நிகிலேஷ் அளித்த விளக்கத்தில், "இவ்விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே சரியான நேரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்" என கூறியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட்
இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்விவகாரம் குறித்து, "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது" என் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











