கென் கருணாஸ் மீது ஜிவி பிரகாஷுக்கு இவ்வளவு பாசமா?..யூத் படத்துக்கு இப்படி ஒரு தியாகத்தை செஞ்சிட்டாரே
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கும் அவர் நடிகராகவும் கலக்கிவருகிறார். சமீபத்தில்கூட அவர் நடிப்பில் லக்கி திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. நடிப்பு மற்றும் இசையமைப்பு என ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களையும் சரியாக செய்துவருகிறார். இந்நிலையில் ஜிவி குறித்து கருணாஸின் கென் பேசியிருக்கும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அவர் அறிமுகமான முதல் படம் வெயிலிலேயே அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கி அனைவரையும் கவர்ந்துவிட்டார். அதனையடுத்து ரஜினியின் குசேலன், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்களில் இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் அவரை டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியது. அதிலும் ஜிவியின் மெலோடிக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் விருதுகள் விஷயத்தில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.
தேசிய விருது பெற்ற ஜிவி: அப்படிப்பட்ட சூழலில்தான் சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த விருதை அவர் பெற்றபோது, தாங்களே பெற்றது போல் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்கள் ரசிகர்கள். அந்தப் படத்துக்கு பிறகு தனுஷின் வாத்தி படத்துக்காகவும் தேசிய விருதை அவர் பெற்று அசத்திவிட்டார். இது அனைவருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது.
நடிகராக ஜிவி: இதற்கிடையே இசையமைப்பில் கலக்கிவந்த அவர்; நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ச்சியாக அவர் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் லக்கி திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியானது. அதுவும் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இடி முழக்கம், இம்மார்ட்டல், மென்டல் மனதில் என ஏகப்பட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்தப் படங்கள் கண்டிப்பாக க்ளிக்காகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

ட்ரெண்டிங்கில் முட்டை கலக்கி: சூழல் இப்படி இருக்க கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் யூத் படத்துக்கும் ஜிவி இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முட்டை கலக்கி என்ற பாடல் சில மாதங்களாகவே பயங்கர ட்ரெண்டாகியிருக்கிறது. தற்காலத்துக்கேற்றபடி அந்தப் பாடல் இருந்தாலும் இசையையும், வரிகளையும் கொல்லாமல் ஒரு மெலோடி டச்சோடு உருவாக்கிய ஜிவி பிரகாஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அத்தனை பேரும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து ரிலீஸ் செய்துவருகிறார்கள். வெற்றிமாறன் மனைவிகூட நடனமாடி இன்ஸ்டாவில் பதிவேற்றியிருந்தார்.
கென் கருணாஸ் பேட்டி: இந்நிலையில் கென் கருணாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு ஜிவி பிரகாஷை ரொம்ப பிடிக்கும். நான் முதன்முறையாக ஒரு படம் செய்கிறேன். எனக்கும் ஒன்றும் தெரியாது. நீங்கள்தான் உதவியாக இருக்க வேண்டும் என்றுதான் அவரிடம் சொன்னேன். அவரும் சரி டா எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். இந்தப் படத்துக்காக அவர் சம்பளம் வாங்கவில்லை. இலவசமாகத்தான் செய்துகொடுத்தார். எனக்கு பழைய பாணியில் பாடல் வேண்டும். ஆனால் இந்த காலத்துக்கு ஏற்றபடி வேண்டும் என சொன்னேன். அதற்கு அவர், 'எப்படி டா அதை செய்ய முடியும்' என கூறினார். ஆனால் அப்படியே செய்துகொடுத்தார். அப்படித்தான் முட்டை கலக்கி பாடல் உருவானது. படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications











